பி.யு.சி.,க்கும் மதிய உணவு திட்டம்; அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
ஷிவமொக்கா: ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, சிறார்களின் கல்விக்கு உதவும் நோக்கில், எல்.கே.ஜி., மற்றும் பி.யு.சி., மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை விஸ்தரிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தொடக்க கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, ஷிவமொக்காவில் நேற்று அளித்த பேட்டி: சிறார்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் பி.யு.சி., மாணவ - மாணவியருக்கும் விஸ்தரிக்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல், மதிய உணவு திட்டம் விஸ்தரிக்கப்படும். இதனால் கூடுதலாக 200 கோடி ரூபாய் செலவாகும். புதிதாக துவங்கப்படும் அரசு பள்ளிகள் உட்பட மாநிலத்தின் அனைத்து கர்நாடக பப்ளிக் பள்ளிகளுக்கு சங்கீத ஆசிரியர், உடற் பயிற்சி ஆசிரியர் நியமிக்கப்படுவர். தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஷிவமொக்காவில் புதிதாக துவங்கப்படும் 900 கர்நாடக பப்ளிக் பள்ளிகளை, முதல்வர் சித்தராமையா திறந்து வைப்பார். புதிய பள்ளிகளை துவக்க, ஆசிரியர்களை நியமிக்க துறையில் நிதி பற்றாக்குறை ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.