காங்., வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் அமைச்சர் மல்லிகார்ஜுன் மகன் வேட்புமனு தாக்கல்
தாவணகெரே: பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்பதை, காங்கிரஸ் அறிவிக்காத நிலையில், அமைச்சர் மல்லிகார்ஜுன் மகன் சமர்த், வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இது, மாநில காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,க்களில் ஒருவராக இருந்தவர் சாமனுார் சிவசங்கரப்பா, 94. கடந்த ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்தார். அவரது மறைவால், தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. அடுத்த மாதம், 9 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. சாமனுார் சிவசங்கரப்பாவின் மகனும், கர்நாடக தோட்ட கலைத்துறை அமைச்சருமான மல்லிகார்ஜுன், தன் மகன் சமர்த்துக்கு சீட் வழங்கும்படி, கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், தொகுதியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் தங்களுக்கு சீட் கேட்கின்றனர். வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, முஸ்லிம் ஓட்டுகள் இருப்பதால், யாருக்கு சீட் வழங்குவது என்பதில், மேலிடம் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில், சமர்த் மல்லிகார்ஜுன் நேற்று காலை தன் தாயும், தாவணகெரே காங்கிரஸ் எம்.பி.,யுமான பிரபா மல்லிகார்ஜுனுடன் சென்று, தேர்தலில் போட்டியிட தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தாத்தா பாணியில்... பின், அவர் கூறியதாவது: என் தாத்தா பயன்படுத்திய காரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தொண்டர்கள், தலைவர்களின் அனுமதி பெற்ற பிறகே, வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன். தேர்தலில் போட்டியிட காங்கிரசிடம் இருந்து, 'பி பார்ம்' கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தாவணகெரேயில் காங்கிரசை வளர்த்தவர் சாமனுார் சிவசங்கரப்பா தான். 'பி பார்ம்' கிடைத்ததும், முறைப்படி மற்றொரு வேட்புமனு தாக்கல் செய்வேன். என் தாத்தாவை போல, நானும் இந்த தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன். அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் எனக்கு தேவை. இவ்வாறு அவர் கூறினார். சாமனுார் சிவசங்கரப்பா வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தன்னுடன் குருபா, முஸ்லிம் தலைவர்கள் ஒருவரை அழைத்து செல்வது வழக்கம். அதே பாணியை சமர்த்தும் நேற்று கடைப்பிடித்தார். அவசர ஆலோசனை சமர்த் வேட்புமனு தாக்கல் செய்த ஒரு மணி நேரத்தில், தாவணகெரே தெற்கில் காங்கிரஸ் சீட் எதிர்பார்க்கும், முஸ்லிம் சமூகத்தின் சாதிக் பைல்வானும் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் சீட் தனக்கே கிடைக்கும் என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வேட்புமனு தாக்கல் விவகாரம், கர்நாடக காங்கிரசில் பரபரப்பையும், தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நிலைமை கை மீறி சென்றதால், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று அவசர பயணமாக பெங்களூரு வந்தார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன் ஆலோசனை நடத்தினார்.