| ADDED : மார் 07, 2026 06:15 AM
பெங்களூரு: பழரசம் போன்ற, 'பஸ் பல்ஸ்' என்ற குளிர்பானத்தில், விஷத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மாதிரியை சேகரித்து, தரத்தை ஆய்வு செய்யும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: கடைகளில் விற்கப்படும், சிறார்கள் விரும்பி அருந்தும், 'பஸ் பல்ஸ்' என்ற குளிர்பானத்தில், விஷத்தன்மை இருப்பது கண்டுபிடி க்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தானாகவே முன் வந்து புகார் பதிவு செய்துள்ளது. குளிர்பானத்தில் அபாயமான நச்சுக்கள் இருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கோரி, மருந்துகள் கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் எழுதியுள்ளது. இதை அருந்துவதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். டின்களில் விற்கப்படும், பஸ் பல்ஸ் குளிர்பானத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. 15 சதவீதம் ஆல்கஹால் அம்சம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை சுகாதாரத்துறையும் தீவிரமாக கருதியுள்ளது. குளிர்பான மாதிரியை சேகரித்து, தரத்தை பரிசோதிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.