ராமசந்திர ராவ் மீது நடவடிக்கை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி
பெங்களூரு: ''ஆபாச வீடியோ வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி ராமசந்திர ராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஐ.பி.எஸ்., அதிகாரி ராமசந்திர ராவ், பெலகாவியில் ஐ.ஜி.,யாக பணியாற்றிய போது தனது அலுவலகத்திலேயே, சில பெண்களுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இந்த வீடியோவின் உண்மை தன்மை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏ.ஐ., பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ இல்லை என தெரிந்து உள்ளது. ராமசந்திர ராவ் தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளார். அவர் மீது துறைரீதியாக விசாரணை நடக்கிறது. இதன் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாவகடாவில் சமூக நலத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டது பற்றி, அத்துறையின் சார்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும். இறந்தவர், தனது துறையின் இணை இயக்குனர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். இதற்கு பின், வேறு காரணம் உள்ளதா எனவும் விசாரிக்கப்படும். ஒரு துறையின் அதிகாரி தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது இயல்பானது. ஆனால் இந்த வழக்கில் அதிகாரி தவறு செய்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி. தாவணகெரே தெற்கு தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது. நான் கட்சியின் தலைவராக இருந்த போதும், இதுபோன்று நிறைய பிரச்னைகளை சந்தித்து உள்ளேன். சாதகம், பாதகங்களை ஆராய்ந்து சமர்த்தை காங்கிரஸ் மேலிடம் வேட்பாளராக அறிவித்துள்ளது. தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதிகள் எங்கள் வசம் தான் இருந்தது. தொகுதியை தக்க வைப்பது முக்கியம். அனைவரும் ஒருங்கிணைந்து கட்சிக்கு வெற்றி தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.