ஓட்டு திருட்டு புகார் குறித்து விமர்சித்த அமைச்சர் ராஜண்ணா... நீக்கம்!; ராகுல் குற்றச்சாட்டுக்கு எதிராக பேசியதால் மேலிடம் அதிரடி
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஓட்டு திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டுக்கு எதிராக பேசியதுடன், காங்கிரஸ் அரசை விமர்சித்ததால் மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கூட்டுறவு அமைச்சராக இருந்தவர் ராஜண்ணா, 74. துமகூரு மாவட்டம், மதுகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார். மனதில் பட்டதை நேரடியாக பேசும் அரசியல்வாதி என்ற பெயர் பெற்ற ராஜண்ணா, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் கெட்டிக்காரர். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருந்த ராஜண்ணா, துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். 'சிவகுமாரிடம் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பறிக்க வேண்டும்; கூடுதலாக ஐந்து துணை முதல்வர் பதவிகளை உருவாக்க வேண்டும்' என்று அடிக்கடி கூறி வந்தார். இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ததால், வாயை மூடி கொண்டு இருக்கும்படி ராஜண்ணாவுக்கு, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அடிமை இல்லை ஆனால், எதற்கும் அலட்டி கொள்ளாத ராஜண்ணா, 'நான் ஒன்றும் மேலிடத்தின் அடிமை இல்லை' என்றும் பகிரங்கமாக கூறினார். இவர், ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார். ஆனால், ஹாசன் மாவட்டத்திற்கு சரியாக செல்வது இல்லை என்று, அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அவரை மாற்றும்படி ஹாசன் மாவட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கூறி வந்தனர். ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருப்பது, ராஜண்ணாவுக்கும் பிடிக்கவில்லை. பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தன்னை நியமிக்கும்படி, சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்து வந்தார். 'ஹனிடிராப்' புகார் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, தன்னை ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்தது; 'மாநில, தேசிய அரசியல்வாதிகள் 48 பேரின் ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவ் உள்ளது' என்று கூறி, ராஜண்ணா பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த மாதம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பெங்களூருக்கு வந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளாத ராஜண்ணா, 'எம்.எல்.ஏ.,க்களுடன் கூட்டம் நடத்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது' என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். 'செப்டம்பர் அல்லது நவம்பரில் அரசியலில் புரட்சி நடப்பது உறுதி' என்றும் கூறி வந்தார். ராகுல் மீது தாக்கு ராஜண்ணாவின் கருத்துகள், கட்சி மேலிடத்தை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது. ஆனாலும் எஸ்.டி., சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் ஓட்டு திருட்டு நடந்ததாக கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் புதிய போராட்டத்தை கையில் எடுத்து உள்ளார். பெங்களூரு மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் ஓட்டு திருட்டு நடந்தது குறித்தும் ராகுல் பேசினார். இதற்கு பதில் அளித்த ராஜண்ணா, 'ஓட்டு திருட்டு நடந்தது உண்மை தான். லோக்சபா தேர்தல் நடந்தது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது எல்லாம் எங்கள் அரசு காலத்தில் தான் நடந்தது. அப்போது, கண்ணை மூடி கொண்டு இருந்தனரா' என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்தை வைத்து, ஓட்டு திருட்டு குறித்து பேசும் ராகுலை, பா.ஜ., கடுமையாக விமர்சித்தது. இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் மேலிடம், ராஜண்ணாவிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து, அமைச்சரவையில் இருந்து ராஜண்ணாவை நீக்கும்படி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு முதல்வர் சித்தராமையா நேற்று காலை கடிதம் அனுப்பினார். இதை ஏற்று, ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து, கவர்னர் உத்தரவிட்டார். ராஜண்ணா பதவி நீக்கம் பற்றிய தகவல் கிடைத்ததும், எதிர்க்கட்சி தலைவர்கள், காங்கிரசை விமர்சிக்க ஆரம்பித்தனர். 'ஓட்டு திருட்டு என்று பொய் குற்றச்சாட்டு கூறும் ராகுலுக்கு எதிராக பேசியதால், மனதில் பட்டதை நேரடியாக பேசும் நேர்மையான அரசியல்வாதியை, காங்கிரஸ் பலிகடா ஆக்கிவிட்டது' என்று விமர்சித்தனர். இதுகுறித்து சட்டசபையில் கருத்து தெரிவித்த ராஜண்ணா, ''என்னை பற்றி பேசி, எதிர்க்கட்சியினர் கீழ்தரமான அரசியல் செய்ய வேண்டாம்,'' என்றார். அமைச்சர்களுடன் ஆலோசனை சித்தராமையாவுக்கு பின் சிவகுமார் முதல்வராகி விடக்கூடாது என்பதில், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த ராஜண்ணா, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உறுதியாக இருந்தனர். இவர்கள் இருவரும் அடிக்கடி ஆலோசனையும் நடத்தினர். தனது பதவியை ராஜினாமா செய்யும் முன், சதீஷ் ஜார்கிஹோளியுடன், ராஜண்ணா ஆலோசனை நடத்தினார். இதுபோல துமகூரு மாவட்டத்தை சேர்ந்த, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருடனும், ராஜண்ணா ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ================ 2வது விக்கெட் காலி கர்நாடக அமைச்சரவையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என 34 பேர் இடம் பெறலாம். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டால், பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த நாகேந்திரா, கடந்த ஆண்டு மே மாதம் ராஜினாமா செய்தார். இதனால், அமைச்சரவையில் 33 பேர் இருந்தனர். தற்போது ராஜண்ணா ராஜினாமா மூலம், அமைச்சரவையில் 2வது விக்கெட் காலியாகி உள்ளது. தற்போது 32 பேர் உள்ளனர். நாகேந்திரா, ராஜண்ணா இருவருமே எஸ்.டி., சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ***