உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சர் சதீஷின் நெருங்கிய ஆதரவாளர் பா.ஜ.,வில் ஐக்கியம் 

 அமைச்சர் சதீஷின் நெருங்கிய ஆதரவாளர் பா.ஜ.,வில் ஐக்கியம் 

பெங்களூரு: அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் நெருங்கிய ஆதரவாளரும், குருபா சமூக மூத்த தலைவருமான சதாசிவா தேசிங்கே, பா.ஜ.,வில் இணைந்துள்ளார். கர்நாடக பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. இவரது நெருங்கிய ஆதரவாளர் சதாசிவா தேசிங்கே. கர்நாடக குருபா சமூகத்தின் மூத்த தலைவராக உள்ளார். இவர், தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சதாசிவா தேசிங்கேவுக்கு, கட்சியின் கொடியை கொடுத்து பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, துணை தலைவர்கள் பைரதி பசவராஜ், பொது செயலர் ராஜீவ், எம்.எல்.ஏ.,க்கள் பசவராஜ் மத்திமோடு, துரியோதன் ஐஹோல் உள்ளிட்டோர் வரவேற்றனர். விஜயேந்திரா பேசியதாவது: சதாசிவா தேசிங்கேவுக்கு குருபா சமூகத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அவர், கட்சியில் இணைந்தது வடமாவட்டங்களில் கட்சிக்கு பலன் அளிக்கும். குருபா சமூகத்திற்கு, பா.ஜ., ஒரு போதும் அநீதி இழைத்தது இல்லை. கனகதாசா ஜெயந்தியை, அரசு விடுமுறையாக அறிவித்தது எடியூரப்பா தான். தேர்தலில் தோற்றாலும், குருபா சமூகத்தின் விஜயசங்கரை எம்.எல்.சி., ஆக்கி அமைச்சர் பதவி வழங்கினோம். 2019ல் பா.ஜ., ஆட்சிக்கு வர, குருபா சமூகம் முக்கிய காரணம். அச்சமூகத்தின் பைரதி பசவராஜ், நாகராஜ் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, எங்களுடன் வந்து சேர்ந்தனர். அவர்கள் செய்த தியாகத்தை, மறக்கவே முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 27 பேர், அமைச்சர்களாக உள்ளனர். இதனால், காங்கிரசுக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் பாவ குடம் நிரம்பி விட்டது. மக்கள் தக்க பாடம் புகட்டுவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !