உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எத்னால் சவாலை ஏற்ற அமைச்சர் சிவானந்த பாட்டீல் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து கடிதம்

எத்னால் சவாலை ஏற்ற அமைச்சர் சிவானந்த பாட்டீல் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து கடிதம்

பெங்களூரு: விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலின் சவாலை ஏற்றுக்கொண்ட, பட்டு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இது அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல், பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் ஆளுங்கட்சி, சொந்த கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் வசைபாடுவதில் கை தேர்ந்தவர்.

மேலிடம் எரிச்சல்

பா.ஜ., தலைவர்களை பற்றி விமர்சித்ததால், மேலிடம் எரிச்சலடைந்து அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இப்போதும், எத்னால் விமர்சிப்பதை நிறுத்தவில்லை.சமீபத்தில் ஹூப்பள்ளியில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எத்னால், இஸ்லாமிய மதத்தின் நபிகள் நாயகம் பற்றி, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதை காங்கிரஸ் தலைவர்கள், கடுமையாக கண்டித்தனர். அமைச்சர் சிவானந்த பாட்டீலும் கூட எத்னாலின் பேச்சை கண்டித்தார். இதே போன்று இருவரும், பரஸ்பரம் விமர்சித்து கொண்டனர். ஒரு கட்டத்தில் சிவானந்த பாட்டீல், 'எனக்கும் விஜயபுரா தொகுதியில், எத்னாலை எதிர்த்து போட்டியிட விருப்பம் உள்ளது. போட்டியிட்டால் வெற்றி பெறுவேன்' என, கூறியிருந்தார்.இவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் எத்னால், 'சிவானந்த பாட்டீல் தன் அப்பனுக்கே பிறந்தது உண்மை என்றால், பசவன பாகேவாடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜயபுராவில் என்னுடன் களமிறங்கி, வெற்றி பெற்று காட்டட்டும் பார்க்கலாம்' என சவால் விடுத்திருந்தார். இவரது சவாலுக்கு சிவானந்த பாட்டீல் பதில் ஏதும் கூறவில்லை.இந்நிலையில் அவர், திடீரென தன் எம்.எல்.ஏ., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். சபாநாயகர் காதரை சந்தித்து, ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதை அங்கீகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர், தன் சவாலை ஏற்பார் என, எத்னாலே எதிர்பார்த்திருக்க மாட்டார். அமைச்சரின் ராஜினாமா, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சகித்து கொண்டோம்

ராஜினாமா கடிதம் கொடுத்த பின், சிவானந்த பாட்டீல் அளித்த பேட்டி:எத்னாலின் பேச்சை நாங்கள் சகித்து கொண்டோம். முஸ்லிம் சமுதாயத்தினரை பற்றி பேசிய போதும் பொறுத்து கொண்டோம். ஆனால் நபிகள் நாயகம் பற்றி பேசியதை கண்டித்தோம். எத்னாலை கண்டித்து விஜயபுராவில் போராட்டம் நடத்த, பலரும் முன் வந்துள்ளனர்.நான் எதுவும் பேசவில்லை. எத்னால் என்னென்ன பேசினார் என்பதை வீடியோ வழியாக காட்டினேன். எங்களின் முன்னோர்கள் பற்றி, எத்னால் விமர்சித்துள்ளார். அவரது தந்தையும், எங்கள் தந்தையும் தொழிலில் பங்குதாரர்களாக உள்ளனர். தனிப்பட்ட முறையில் விமர்சித்து, எங்கள் கவுரவத்தை குலைத்துள்ளார். இதை நான் கண்டிக்கிறேன்.என்னிடம் எத்னால் சவால் விடுத்திருந்தார். அதை ஏற்று நானும் ராஜினாமா செய்துள்ளேன். அதேபோன்று எத்னாலும் ராஜினாமா செய்ய வேண்டும். என் தொகுதிக்கு அவர் வருகிறாரா அல்லது அவரது தொகுதிக்கு நான் வர வேண்டுமா. அவரே முடிவு செய்யட்டும்.எத்னால் ராஜினாமா செய்தால், என் ராஜினாமாவை அங்கீகரிக்கும்படி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எத்னாலை அழைத்து சபாநாயகர் விசாரணை நடத்தட்டும். இவ்வாறு அவர் கூறினார்.எத்னால் கிண்டல்என் சவாலை ஏற்று, அமைச்சர் சிவானந்த பாட்டீல், பசவன பாகேவாடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், 'பசனகவுடா பாட்டீல் எத்னால் ராஜினாமா செய்து, அதை அங்கீகரித்த பின், என் ராஜினாமாவை அங்கீகரியுங்கள்' என, நிபந்தனை விதித்துள்ளார்.பதவியை ராஜினாமா செய்ய விரும்புவோர், இரண்டு வரிகளில் கடிதம் எழுதி, சபாநாயகரிடம் அளிப்பர். யாராவது இதுபோன்ற நிபந்தனை விதித்து, ராஜினாமா கடிதம் அளிப்பரா. இப்படி ராஜினாமா செய்வது முட்டாள்தனம். சிவானந்த பாட்டீலுக்கு மானம், மரியாதை இல்லை. நான் ராஜினாமா செய்வது குறித்து, இன்னும் சில நாட்களில் முடிவு செய்வேன்.- பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை