ரயில் நிலையங்களில் வசதிகள் அமைச்சர் சோமண்ணா விளக்கம்
கோலார்: ''ரயில்வே கட்டண உயர்வை மட்டும் பார்க்காமல், ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளையும் பார்க்க வேண்டும்,'' என்று ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார். கோலாரில் ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா அளித்த பேட்டி: ரயில் டிக்கெட் கட்டணம் 500 கி.மீ.,க்கும் அதிகமான பயணத்திற்கு மட்டும் 10 ரூபாய் அதிகரிக்கப் பட்டுள்ளது. கட்டண உயர்வை பார்ப்பதுடன், மட்டுமல்லாமல் ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளையும் பார்ப்பது பொருத்தமானது. இந்த துறையில் 12 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். நான், ரயில்வேத்துறை இணை அமைச்சரான போது, மாநிலத்தில் 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் நிலுவையில் இருந்தன. பழைய திட்டப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். 2027க்குள் அவற்றை செய்து முடிப்பேன். முன்பு, கன்னடத்தில் ரயில்வே தேர்வுகள் எழுத வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பிரதமர் மோடி உட்பட பலரை சந்தித்த பின் அனுமதி வழங்கப்பட்டது. மாநிலத்தின் அந்தந்த மொழிகளில் தேர்வு நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். துமகூரு தொகுதியின் எம்.பி., என்பதால் அதே மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஜி.பரமேஸ்வர் முதல்வரானால் நல்லது என்ற கருத்து தெரிவித்து இருந்தேன். மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ரயில்வே துறையின் வளர்ச்சி பணிகளில் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். இது தொடர்பாக அவரது வீட்டுக்கு சென்று பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.