அரசு திட்டங்களில் அமைச்சர்களின் குடும்பத்தினர் தலையீடு!: முதல்வருக்கு கான்ட்ராக்டர்கள் சங்கம் பரபரப்பு கடிதம்
பெங்களூரு: அரசு திட்ட பணிகளை செய்ததற்காக பணம் விடுவிக்கும் விஷயத்தில், இரண்டு அமைச்சர்களின் குடும்பத்தினர் தலையீடு இருப்பதாக முதல்வர் சித்தராமையாவுக்கு, கான்ட்ராக்டர்கள் சங்கம் பரபரப்பு கடிதம் எழுதி உள்ளது. கர்நாடகாவில், முந்தைய பா.ஜ., ஆட்சியில், கான்ட்ராக்டர்களுக்கு அவர்கள் செய்த பணிக்கு பில் தொகை விடுவிக்க, அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் வாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. தற்போது, காங்கிரஸ் ஆட்சியிலும் கான்ட்ராக்டர்களிடம் லஞ்சம் வாங்கப்படுகிறது. இது குறித்து, கான்ட்ராக்டர் சங்க முன்னாள் தலைவர் கெம்பண்ணாவும் குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து, காங்கிரசை 60 சதவீத கமிஷன் அரசு என்று, பா.ஜ., விமர்சித்து வருகிறது. கான்ட்ராக்டர்களும் தங்கள் செய்த பணிக்கு, பில் தொகை விடுவிப்பதில் அரசு அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். தெரியாத கைகள்
இந்நிலையில், கான்ட்ராக்டர் சங்க தலைவர் மஞ்சுநாத், முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், 'பொதுப்பணி, சிறிய நீர்பாசன துறைக்கு உட்பட்ட நான்கு வாரியங்களில் நடந்த பணிகளை, கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் எடுத்து செய்தனர். அதற்கான நிதி எங்களுக்கு நேரடியாக கிடைப்பது இல்லை. மத்தியஸ்தர்கள் குறுக்கே வந்து நிற்கின்றனர்.'வெளியில் தெரியாத கைகள், எங்களிடம் லஞ்சம் கேட்கின்றன. இதனால், நான்கு வாரியங்களின் நிர்வாக இயக்குநர்களை நேரில் அழைத்து பேச வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இது பற்றி, மஞ்சுநாத் நேற்று அளித்த பேட்டி:பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நல்ல மனிதர். அவர் எங்களிடம் லஞ்சம் கேட்கவில்லை. நாங்கள் செய்த பணிக்கு நேரடியாக, பொதுப்பணி துறை பணம் செலுத்தியது. ஆனால், சமீபகாலமாக சதீஷ் ஜார்கிஹோளியின் உறவினர் ஒருவர், பொதுப்பணித் துறையில் தலையிடுகிறார்.எங்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டிய பணத்தை கிடைக்க விடாமல் செய்கிறார். 'கமிஷன் கொடுத்தால் தான் பணம் விடுவிக்கப்படும்' என்றும் கூறுகிறார்.நிறைய வெளியே தெரியாத கைகள் கமிஷன் விஷயத்தில் ஈடுபடுகின்றன. மாநிலத்தில், 1.50 லட்சம் கான்ட்ராக்டர்கள் உள்ளனர். அவர்களில் 60,000 பேர் சிறிய அளவிலான பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்பவர்கள். அவர்களுக்கு பில் தொகை சரியாக வழங்கப்படுவது இல்லை. சிறிய நீர்பாசன துறையில், அந்த துறை அமைச்சரான போசராஜுவின் மகன், குடும்பத்தினர் தலையீடு உள்ளது. இதுபற்றியும் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னணியில் யார்?
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அமைச்சர் போசராஜு நேற்று கூறுகையில், ''கான்ட்ராக்டர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன், ஆலோசனை நடத்தினேன். தங்களது கஷ்டத்தை எடுத்து கூறினர். முதல்வரிடம் பேசி உங்கள் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினேன்.''கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் கூறிய குற்றச்சாட்டு பொய். எனது துறை அதிகாரிகள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில், கான்ட்ராக்டர்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளேன். எனது மகன், குடும்பத்தினர் தலையீடு இல்லை. நானே நேரடியாக அனைத்தையும் கவனிக்கிறேன்,'' என்றார். சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''எனது குடும்பத்தினர் யாரும், எனது துறையில் தலையிடுவது இல்லை. அதற்கு நான் அனுமதிப்பதும் இல்லை. கான்ட்ராக்டர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகை, எனது துறை சார்பில் விடுவிக்கப்பட்டு வருகிறது.''கான்ட்ராக்டர்களுக்கு பில் தொகை விடுவிக்கும்படி முன்னாள் தலைவர் கெம்பண்ணா, என்னை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளார். தற்போதைய தலைவர் மஞ்சுநாத், இதுவரை என்னை சந்தித்தது இல்லை. அப்படி இருக்கையில் எதற்காக குற்றம் சாட்டுகிறார் என்று தெரியவில்லை. இதன் பின்னணியில் யாராவது இருக்கலாம்,'' என்றார்.