சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது
பெலகாவி : ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பசு பாதுகாப்புப் படையை சேர்ந்த புனித் கெரேஹள்ளி, சில தினங்களுக்கு முன்பு, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பெலகாவி மாவட்டம் யரகட்டி நகரில் சிறுமி பலாத்காரம் செய்யப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையுடன், அவர் நடத்திய உரையாடலையும் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை கிளப்பியது. இந்த வீடியோவை பெலகாவி சமூக ஊடகங்களை கண்காணிக்கும் போலீசார் பார்த்து அதிர்ந்தனர். அவர்கள், பெலகாவியில் உள்ள முர்கோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், யரகட்டியில், 2023 அக்டோபர் 5ம் தேதி, ஐந்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த துலேபஹ்மத் தாதாபீர் நாகர்ச்சி, 22, என்பவரை 'போக்சோ' வழக்கில் நேற்று போலீசார் கை து செய்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., பீமாசங்கர் குலேட் கூறுகையில், ''புனித் கெரேஹள்ளி பகிர்ந்த வீடியோவின் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ' 'புகார் அளிக்கக் கூடாதென சிறுமியின் பெற்றோரை சிலர் மிரட்டி உள்ளனர். இந்த மிரட்டல்களுக்கு பயந்து, அவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்,” என்றார்.