ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் கைதான எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு ஜாமின்
பெங்களூரு: பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் கைதான, பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உ ள்ளது. பெங்களூரு பாரதிநகரில் வசித்த ரவுடி சிவகுமார், 46. கடந்த ஆண்டு ஜூலை, 15ம் தேதி இரவு, வீட்டின் முன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் அவர் கொலையானது தெரிய வந்தது. இந்த வழக்கில் கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் மற்றும் உயர், உச்ச நீதிமன்றங்களில் இவரது முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த மாதம், 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்த பைரதி பசவராஜை, விமான நிலையத்திலேயே சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் விசாரித்தார். ஜா மின் வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதை, பைரதி பசவராஜ் தரப்பு சுட்டிக் காட்டியது. அதனை ஏற்ற நீதிபதி, எம்.எல்.ஏ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார். இரண்டு லட்சம் ரூபாய் பிணையத்தொகை செலுத்த வேண்டும்; இரண்டு பேர் சாட்சி கையெழுத்து போட்ட உத்தரவாத பத்திரம் வழங்க வேண்டும்; சாட்சிகளை மிரட்டக்கூடாது; விசாரணை அதிகாரி அழைக்கும் போது, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்; நீதிமன்ற விசாரணைக்கும் தவறாமல் வர வேண்டும்; நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் வெளிநாட்டிற்கு செல்ல மாட்டேன் என்று, பிரமாண பத்திரம் சமர்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை, நீதிபதி விதித்தார்.