உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கொலை வழக்கில் கைதான எம்.எல்.ஏ., பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

 கொலை வழக்கில் கைதான எம்.எல்.ஏ., பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

பெங்களூரு: ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் கைதான, பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பெங்களூரு பாரதிநகரை சேர்ந்தவர் ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா, 46. கடந்த ஆண்டு ஜூலை, 15ம் தேதி வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி., போலீசார், வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை, கடந்த, 12ல், பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின், 15ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன், அவரை ஆஜர்ப்படுத்தினர். ஏழு நாட்கள் சி.ஐ.டி., காவலில் விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,விடம் ஏழு நாட்களும் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் முதல் குற்றவாளி ஜெகதீஷுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், அவருடன் பேசிய மொபைல் போன் அழைப்புகளை குறிப்பிட்டு விசாரித்தனர். எனக்கும், ஜெகதீஷுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யார் என்றே தெரியாது என்று மட்டுமே, பைரதி பசவராஜ் திரும்ப, திரும்ப கூறியுள்ளார். இந்நிலையில், நேற்றுடன் அவரது போலீஸ் காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால், மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி, சி.ஐ.டி., வக்கீல் அசோக் நாயக் கேட்டுக் கொண்டார். இதற்கு எம்.எல்.ஏ., தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே அவர் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் இருந்து விட்டார். அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவருக்கு உடல் நல பிரச்னை உள்ளது என்று வாதிட்டார். சி.ஐ.டி., காவலில் இருந்த போது, எம்.எல்.ஏ.,க்கு எந்த உடல்நல பிரச்னையும் இல்லை என்று அரசு தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், பைரதி பசவராஜை, வரும் 26ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்தனர். இதற்கிடையில் வீட்டு சாப்பாடு வழங்க கோரி, பைரதி பசவராஜ் தாக்கல் செய்த மனுவையும், நீதிபதி தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Aravind Srinivasagopalan
பிப் 22, 2026 07:50

வாக்களித்த தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை எதுவும் செய்துத்தாராமல், தன்னுடைய மக்கள் பணியை செய்யாமல், தான் கொள்ளையடித்த சொத்துக்களையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ள, எந்தளவிற்கும் அடிமட்டத்திற்கு சென்று கூலிப்படையை ஏவி கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போல் நடித்து தன்னை உத்தமனாக காட்டிக் கொள்கிறார். அரசியல்வாதிகள் என்றாலே ரெளடித்தனம், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது, கனிம வளங்களை கொள்ளையடிப்பது, கொலை செய்வது, பணக்கார முதலாளிகளுக்கு சேவை செய்வது, கட்அவுட் வைத்து தங்களை அரசன் போல பாவித்துக் கொண்டு பகட்டு, தற்பெருமையோடு மக்களுக்காக எந்த பொது சேவைகளை செய்யாமல், தங்களது பணி என்ன என்பதை மறந்து, எந்தவித குற்ற உணர்ச்சியில்லாமல் இருப்பது தான் எம். எல். ஏ சட்டசபை உறுப்பினர்களின் குணாதசியங்களாக உள்ளது போலீஸ் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக தக்க சாட்சிகளும், ஆதாரங்கள் இல்லாமல் தீர்பை வழங்க மாட்டார்கள் இத்தகைய அரசியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், ‌MLA பதவியை பறிக்க வேண்டும், அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட தடைசெய்ய வேண்டும்