உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாத எம்.எல்.ஏ.,க்கள்

தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாத எம்.எல்.ஏ.,க்கள்

பெங்களூரு: தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில், மாநில எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 2024 - 25ல் வெறும் 32 சதவீத நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.கர்நாடகாவில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை, மாநில அரசு வழங்குகிறது. இந்த நிதி நேரடியாக எம்.எல்.ஏ.,க்களின் கணக்குக்கு செலுத்தப்படாது. மாவட்ட கலெக்டரின் தனிப்பட்ட கணக்கில் இருப்பு வைக்கப்படும்.தங்களின் தொகுதிகளில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து, திட்ட அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ.,க்கள் அளித்து, நிதியை பெற்று பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.ஏரிகள் அமைப்பது, குடிநீர் வழங்குவது, பள்ளி, கல்லுாரிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவது, பொது கழிப்பறைகள், மருத்துவமனை, அங்கன்வாடி கட்டுவது, பஸ் நிலையம், சமுதாய பவன், மாணவர் விடுதி கட்டுவது என்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம்.ஆனால், எம்.எல்.ஏ.,க்கள், ஆண்டுதோறும் தங்கள் தொகுதிக்கு கிடைக்கும் நிதியை, சரியாக பயன்படுத்துவது இல்லை என்பது தெரியவந்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பதவியேற்றதில் இருந்து, தொகுதி மேம்பாட்டுக்கு மாநில அரசு நிதி வழங்கவில்லை என்று பொதுவாக அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் குற்றஞ்சாட்டி வந்தனர்.'வாக்குறுதித் திட்டங்களுக்கே, பெரும் தொகையை அரசு செலவிடுகிறது. எங்கள் தொகுதி மேம்பாட்டுக்கு நிதி வழங்கவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. தொகுதிக்கு சென்றால் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எங்களால் தலை காட்ட முடியவில்லை' என, அவர்கள் புலம்பி வருகின்றனர்.ஆனால் முந்தைய ஆண்டுகளில், அரசு வழங்கிய நிதியை பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. திட்டம் மற்றும் புள்ளியல் துறை தெரிவித்துள்ள புள்ளி விபரங்களின்படி, 2024 - 25ல் கலெக்டர்களின் தனிப்பட்ட கணக்கில், 1,448.95 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இருந்தது.இதில், 460.78 கோடி ரூபாய் மட்டுமே, தங்கள் தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் செலவிட்டனர். 988 கோடி ரூபாய் இன்னும் மிச்சமுள்ளது. 2023 - 24ம் ஆண்டிலும் 46 சதவீத நிதி மட்டுமே செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை