பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரத்தில், மடாதிபதிகள் தலையிட்டுள்ளனர். சித்தராமையா, சிவகுமாருக்கு போட்டி போட்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். 'சோனியா, ராகுல் முன்னிலையில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்' என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இன்றோ, நாளையோ முதல்வரும், துணை முதல்வரும் டில்லி செல்லலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. 'ஆளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என, மேலிடம் போட்ட ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கவில்லை என்று சித்தராமையா மீது, சிவகுமார் தரப்பு கடுப்பில் உள்ளது. * சந்தோஷம் 'சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, சிவகுமார் சார்ந்த ஒக்கலிக சமூகத்தின், பிரபல மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி நேற்று முன்தினம் கூறினார். இதையடுத்து, சிவகுமாருக்கு மேலும் சில மடாதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். துமகூரு பட்டநாயக்கனஹள்ளியில் உள்ள குருகுந்தா பிரம்மேஸ்வர சுவாமி மடத்தின் மடாதிபதி நஞ்சவதுாத சுவாமிகள் நேற்று கூறியதாவது: சித்தராமையா நல்லாட்சி கொடுக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் மேலிடம் கொடுத்த வாக்குறுதியின்படி, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், சிவகுமார் முதல்வர் பதவியை கேட்கிறார். இதில் என்ன தவறு உள்ளது. இதற்கு முன்பு சித்தராமையா, 5 ஆண்டுகள் முழுமையாக பதவியில் இருந்தார். அவருக்கு சிவகுமார் முழு ஆதரவு கொடுத்தார். இப்போது, சித்தராமையா பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பெலகாவி மடிவாளேஸ்வரா மடத்தின் மடாதிபதி வீரேஸ்வர சுவாமி கூறுகையில், ''சித்தராமையாவும், சிவகுமாரும் இரண்டரை ஆண்டுகள் கைகோர்த்து செயல்பட்டனர். முதல்வர் பதவியால் இருவருக்கும் இடையில் பிரச்னை வந்து விடக்கூடாது. உங்கள் சண்டையால் கட்சிக்கு சேதம் ஏற்படுத்தி விடாதீர்கள். சிவகுமார் முதல்வர் ஆக, சித்தராமையா ஆதரவளிக்க வேண்டும். சிவகுமார் முதல்வராகா விட்டால், அரசு கவிழ்வது உறுதி,'' என்றார். இதற்கு போட்டியாக, சித்தராமையாவுக்கும் அவர் சார்ந்த குருபா சமூக ஆதரவு கிடைத்து உள்ளது. காகினாலே மடத்தின் மடாதிபதி நிரஞ்சனாந்தபுரி சுவாமி, வால்மீகி, போவி, மடிவாளா, கும்பாரா உட்பட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த, மடாதிபதிகள் ஆதரவும் கிடைத்து உள்ளது. இவர்கள், 'எந்த காரணத்திற்கும் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற கூடாது; அப்படி செய்தால் வரும் தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்' என, எச்சரித்து உள்ளனர். அதே நேரம், மடாதிபதிகள் அரசியலில் தலையிடுவதற்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. 'மடாதிபதிகள் ஆன்மிக பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும்; அரசியலில் மூக்கை நுழைக்கக் கூடாது' என்று, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜண்ணா கண்டித்துள்ளார். * நிச்சயம் செல்வேன் இந்நிலையில், உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள, டில்லியில் இருந்து நேற்று முன்தினம் பெங்களூரு வந்த மல்லிகார்ஜுன கார்கே, நேற்று காலை மீண்டும் டில்லி கிளம்பினார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ''நான் டில்லி சென்ற பின், நான்கு, ஐந்து முக்கிய தலைவர்களுடன் விவாதிப்பேன். அதன்பின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சித்தராமையா, சிவகுமாரை டில்லிக்கு அழைத்து விவாதித்து பிரச்னையை தீர்ப்போம்,'' என்றார். இதன்படி நேற்று டில்லி சென்ற கார்கே, ராகுல், வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்றோ, நாளையோ முதல்வரும், துணை முதல்வரும் டில்லி செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. ======= பாக்ஸ்கள் பலிக்காத தந்திரம் சித்தராமையா ஆதரவு அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தால், தனக்கு முதல்வர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த சிவகுமார், சித்து ஆதரவு அமைச்சர்கள் ஜார்ஜ், ஜமீர் அகமது கான், சதீஷ் ஜார்கிஹோளியுடன் ரகசிய ஆலோசனை நடத்தி, அவர்களின் மனதை கரைக்க முயன்றார். ஆனால், அவரது தந்திரம் எடுபடவில்லை. 'சித்தராமையாவே 5 ஆண்டுகளும் முதல்வர்' என்று, ஜமீர் அகமது கான் நேற்று கூறினார். சதீஷ் ஜார்கிஹோளியும், 'சித்தராமையா தலைமையே வேண்டும்' என்று கூறியதுடன், '2028 சட்டசபை தேர்தலில் நானும் முதல்வர் பதவி கேட்பேன்' என்றும் அறிவித்து உள்ளார். =================== சிவகுமாரின் மர்ம பதிவு சிவகுமார், தன் எக்ஸ் பதிவில், 'வார்த்தையின் சக்தி, உலகத்தின் சக்தி' என்றும், 'நீதிபதி, தலைவர் உட்பட யாராக இருந்தாலும் சொன்ன சொல்படி நடக்க வேண்டும்' என, பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'நான் அப்படி பதிவை வெளியிடவே இல்லை' என்று, சிவகுமார் மறுத்து விட்டார். ============ படையெடுத்த தலைவர்கள் சித்தராமையா, சிவகுமார் வீட்டிற்கு ஆதரவாளர்கள் மாறி, மாறி படையெடுத்து செல்கின்றனர். சித்தராமையாவின் காவிரி இல்லத்திற்கு நேற்று காலை, அமைச்சர்கள் ஜார்ஜ், மஹாதேவப்பா, பைரதி சுரேஷ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் சென்றனர். 'எக்காரணம் கொண்டும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்காதீர்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்' என்று கூறி உள்ளனர். இதுபோன்று சிவகுமார் வீட்டிற்கு சென்ற ஹாரிஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். விதான் சவுதாவில் அமைச்சர் ராமலிங்க ரெட்டியை சந்தித்து, சிவகுமார் தம்பி சுரேஷ் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். =========== 'அஹிந்தா' ஆதரவு! தன் பதவிக்கு பிரச்னை ஏற்படும் போது, சித்தராமையா பயன்படுத்தும் ஒரே பிரம்மாஸ்திரம், அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை தான். இப்போதும் சித்தராமையாவுக்கு ஆதரவாக, அஹிந்தா சமூகங்கள் ஒன்று கூடி உள்ளன. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் அஹிந்தா ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சித்தராமையா, தன் 75வது பிறந்தநாளை, தாவணகெரேயில் கொண்டாடிய போது, ராகுலை அழைத்திருந்தார். அந்த மாநாட்டிற்கு முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் திரண்டு வந்ததை பார்த்து, ராகுல் ஆச்சரியம் அடைந்தார். 'முஸ்லிம் ஓட்டுகள் இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஓட்டு கிடைத்தால் கூட வெற்றி பெறலாம் போல' என்று ராகுல் அப்போது கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மீண்டும் ஒரு முறை ராகுல் முன்பு, 'அஹிந்தா' பிளானை பயன்படுத்த சித்தராமையா தயாராகி வருகிறார். ============ சித்து மீது ராகுல் அதிருப்தி? கடந்த 15ம் தேதி டில்லியில் ராகுலை சந்தித்த சித்தராமையா, முதல்வர் பதவி குறித்து விவாதித்து உள்ளார். 'மல்லிகார்ஜுன கார்கேயிடம் விவாதியுங்கள்' என்று கூறி ராகுல் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், பெங்களூரு வந்த கார்கேயை, சித்தராமையா சந்தித்து பேசினார். ஆனாலும், 'முதல்வர் பதவி குறித்து இங்கு விவாதிக்க வேண்டாம்; ராகுல் முன்பு விவாதிக்கலாம்' என்று சித்தராமையா கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கார்கே, 'ஊடகம் முன்பு நான் சொல்வதற்கு எதுவும் இல்லை; மேலிடம் முடிவு எடுக்கும்' என்று கூறி இருந்தார். இதனால் கார்கேயை ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்று, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இது ராகுலின் காதுக்கு செல்லவே, அவர் சித்தராமையா மீது அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அரசு பணிகளில் சித்தராமையா மகன் தலையிடுவது பற்றி அறிந்தும், ராகுல் கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ============== பிப்ரவரியில் முதல்வர் மாற்றம்? முதல்வர் பதவி பிரச்னை ஒரு பக்கம் இருக்க, அடுத்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடருக்கான பட்ஜெட்டை தயாரிக்க, நிதி துறை அதிகாரிகளுக்கு, சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார். மாநிலத்தின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமை தேவராஜ் அர்ஸுக்கு உள்ளது. இச்சாதனையை முறியடிக்க, சித்தராமையாவுக்கு இன்னும் 43 நாட்களே தேவை. இதனால், அச்சாதனையை முறியடிக்கும் வரை, தன்னை முதல்வராக பணியாற்ற அனுமதி கொடுங்கள் என்று மேலிடம் முன் அவர் கோரிக்கை வைக்கலாம் என்றும், இதற்கு மேலிடம் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், பிப்ரவரியில் முதல்வர் மாற்றம் நடக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ======= பொறுக்க மாட்டோம் அஹிந்தா சமூக கூட்டமைப்பு தலைவர் ராமசந்திரப்பா கூறுகையில், ''செய்த வேலைக்காக சிவகுமாருக்கு கூலி கொடுக்க வேண்டும் என்று, ஒக்கலிக சமூகம் கேட்கிறது. சிவகுமாருக்கு கூலியாக துணை முதல்வர் பதவி கிடைத்து உள்ளது. சில மடாதிபதிகளும், சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று மிரட்டினர். ''இத்தகைய அச்சுறுத்தல்களை பல ஆண்டுகளாக சந்தித்து வருகிறோம். மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். அஹிந்தா சமூகத்தின் 70 சதவீத மக்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். சித்தராமையா மீது கை வைக்க நினைத்தால் பொறுத்து கொள்ள மாட்டோம்,'' என்றார். ======== 5 ஆண்டுகளும் நீடிப்பார் சித்தராமையா மகன் யதீந்திரா கூறுகையில், ''முதல்வராக ஐந்து ஆண்டுகளும் சித்தராமையா நீடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு எடுக்கும். இங்குள்ளவர்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று சிவகுமார் தரப்பு கூறுவது பற்றி எனக்கு தெரியாது. ஏன் அப்படி சொல்கின்றனர் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும்,'' என்றார். ***