கைக்குழந்தையை கொன்று தாய் துாக்கிட்டு தற்கொலை
மைசூரு: நகருக்கு வர மறுத்த கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், கைக்குழந்தையை துாக்கிட்டு கொலை செய்த பெண், தானும் தற்கொலை செய்து கொண்டார். மகள் தப்பியோடியதால், உயிர் பிழைத்தார். மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின் சித்தய்யனஹுந்தி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா, 25. முருடனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சாமி, 30. தம்பதிக்கு லோச்சனா, 6, என்ற மகளும், கான்விக், 3, என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். குழந்தைகளுடன் முருடனஹள்ளி கிராமத்தில் வசிக்கின்றனர். கி ராமத்து வாழ்க்கை தீபிகாவுக்கு பிடிக்கவில்லை. மைசூருக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசிக்கலாம் என, கணவரை நச்சரித்தார். தற்போது பணப்பிரச்னை உள்ளதால், மைசூருக்கு செல்ல முடியாது. சிறிது காலம் பொறுத்திருக்கும்படி, கணவர் புத்திமதி கூறினார். இதனால் தம்பதிக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டது. நகருக்கு வர கணவர் சம்மதிக்காததால், கோபமடைந்த தீபிகா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, மகன் கான்விக்கை துாக்கிலிட்டு கொலை செய்தார். மகள் லோச்சனாவை துாக்கிலிட முயற்சித்தபோது, அவர் தாயிடம் இருந்து உயிர் தப்பினார். அதன்பின் தீபிகா, தானும் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்த ஜெயபுரா போலீசார், அங்கு வந்து தாய், மகனின் உடல்களை மீட்டனர். சம்பவம் பற்றி விசாரிக்கின்றனர்.