உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கள்ளக்காதலியை மணக்க நினைத்த மகனை கொன்ற தாய்

கள்ளக்காதலியை மணக்க நினைத்த மகனை கொன்ற தாய்

துமகூரு: சமையல் தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலியை திருமணம் செய்ய நினைத்ததால், தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. துமகூரு தாலுகா, ஜக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ், 33, சமையல் தொழிலாளி. பெங்களூரில் வேலை செய்தார். கடந்த 19ம் தேதி ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 22ம் தேதி இரவு வீட்டின் முன் பாய் விரித்து துாங்கிய முத்துராஜை, நள்ளிரவில் மர்மநபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். நேற்று முன்தினம் காலை போலீசாருக்கு தகவல் தெரிந்தது. முத்துராஜின் தாய் சிவம்மா, 55, என்பவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின், முரணாக பதில் அளித்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதை, தாய் ஒப்பு கொண்டார். இதையடுத்து, நேற்று கைது செய்யப்பட்டார். திருமணம் ஆகாத முத்துராஜிக்கு, ஜக்கனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகளின் தாயான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்தார். இதுபற்றி சிவம்மாவுக்கு தெரிந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி மகனிடம் கூறினார். அவர் கேட்கவில்லை. வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், சிவம்மா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், முத்துராஜ், தனது முடிவில் உறுதியாக இருந்தார். வேறு ஜாதியை சேர்ந்த பெண், அதுவும் இரு குழந்தைகளின் தாயை மகன் திருமணம் செய்தால், தனது கவுரவம் போய் விடும் என நினைத்த சிவம்மா, முத்துராஜை இரும்பு கம்பியால் அடித்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ