கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திற்கு கிருஷ்ணா நதி வழங்க எம்.பி., வலியுறுத்தல்
''கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திற்கு கிருஷ்ணா நதி நீர் வழங்க வேண்டும்,'' என, கோலார் தொகுதி ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு லோக் சபாவில் வலியுறுத்தினார்.லோக்சபாவில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:கிருஷ்ணா நதி நீர், கர்நாடகா வழியாக ஆந்திராவுக்கு செல்கிறது. மத்திய அரசு நதிநீர் பிரச்னையில் தலையிட்டு கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களுக்கு கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும்.கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் குடிநீருக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதனால் பெங்களூரின் கழிவுநீரை இரண்டு கட்டமாக சுத்திகரிப்பு செய்து, கே.சி., வேலி எனும் கோரமங்களா -- செல்லகட்டா வயல்வெளி நீர் கோலார் மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.இந்த நீரை பயன்படுத்துவதால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோலார், சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களுக்கு எத்தினஹொளே திட்டத்தை 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்து ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் கிடைத்தபாடில்லை.கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டு, பால், மாம்பழம், தக்காளி ஆகியவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் உற்பத்திக்கு நீர் வளம் அவசியம் தேவைப்படுகிறது.கோலார் மாவட்டத்தில் 2,479 ஏரிகள் உள்ளன. இவை சிறிய நீர்வளத்துறை, மாவட்ட பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. ஏரிகள் வறண்டு விட்டன; நிலத்தடி நீரும் பாதித்துள்ளது.விவசாயம் உட்பட இது தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு தேவையான நீர் இல்லை.கோடை காலத்தில், கோலார் மாவட்டம் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்குகிறது. விளைபொருள் உற்பத்தியும் பாதித்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -