உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரு மித்ரா நாளிதழ் நிறுவனர் கே.பி.கணபதி காலமானார்

மைசூரு மித்ரா நாளிதழ் நிறுவனர் கே.பி.கணபதி காலமானார்

மைசூரு : கன்னட 'மைசூரு மித்ரா', ஆங்கில 'ஸ்டார் ஆப் மைசூரு' மாலை நேர நாளிதழ் நிறுவனரும், ஆசிரியருமான கே.பி.கணபதி, 85, நேற்று காலமானார்.குடகு மாவட்டம், கக்கப்பே குன்சிலா கிராமத்தை சேர்ந்த போப்பை - முத்தவ்வா தம்பதி மகன் கே.பி.கணபதி. கர்நாடக பத்திரிகை துறையில் சுருக்கமாக கே.பி.ஜி., என்று அழைக்கப்பட்டவர்.கடந்த 1975ல் இவருக்கு திருமணமானது. இவரின் மனைவி அரசு பள்ளி ஆசிரியர் என்பதால், மைசூரில் குடியேறினர். பத்திரிகை துறையில் விருப்பம் இருந்ததால், 1978ல் கன்னடத்தில், 'மைசூரு மித்ரா'; ஆங்கிலத்தில் 'ஸ்டார் ஆப் மைசூரு' என்ற பெயரில் மாலை நாளிதழை துவக்கினார்.இவரது பத்திரிகைகளில் வெளியான மக்கள் பிரச்னைகள், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. பல பிரச்னைகளை வெளியே கொண்டு வந்து, அதற்கு தீர்வு கண்டார்; இன்றும் அது தொடர்கிறது. மக்கள் நல பணிகளில் தன்னை அர்ப்பணித்தவர். 1999ல் கார்கில் போரில் பாதிக்கப்பட்டோர்; 2001ல் குஜராத் நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டோர்; 2003ல் மஹாராஷ்டிரா மாநிலம், லத்துாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டோர்; 2004ல் தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் என பலருக்கும் நிதி சேகரித்து, வழங்கி உள்ளார். கன்னடம், உருது உயர் நிலைப்பள்ளிகளை தத்தெடுத்து, தேவையான உதவிகளை செய்துள்ளார்.இது தவிர, கன்னடம், ஆங்கிலத்தில் பல புத்தகங்களை எழுதி உள்ளார். 2008ல் கர்நாடக அரசின் 'ராஜ்யோத்சவா' விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.வயது மூப்பு காரணமாக நேற்று காலை காலமானார். இவருக்கு மனைவி ராலி, மகன்கள் விக்ரம் முத்தன்னா, மிக்கி போப்பன்னா உள்ளனர். அவரது உடலுக்கு மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் உட்பட பல அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள இடுகாட்டில் இறுதி சடங்கு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ