போதை தயாரிப்பு மையமாக மைசூரு; பா.ஜ., இளைஞரணி இன்று போராட்டம்
பெங்களூரு : மைசூரில் போதைப் பொருள் தயாரிப்பு மையம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, மைசூரில் இன்று பா.ஜ., இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடக்க உள்ளது. கர்நாடக பா.ஜ., இளைஞர் அணி தலைவரும், பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் எம்.எல்.ஏ.,வுமான தீரஜ் முனிராஜ் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில் போதைப் பொருள் தயாரிப்பு மையத்தை, மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போதைப் பொருள் தயாரிப்பு மையம் நடத்தியவர்களுக்கு ஆதரவாக இருந்த போலீசார், உள்ளூர் அரசியல்வாதிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்திற்கு பொறுப்பு ஏற்று, முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மைசூரில் இன்று பா.ஜ., இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடக்க உள்ளது. வரும் நாட்களில் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்துவோம். போதைப் பொருள் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் தான், ஆட்சி நடக்கிறதா? போதைப் பொருள் சப்ளையர், தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மாவட்டத்தில் இருந்தால், போதைப் பொருள் தயாரிப்பவர் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இருக்கிறார். போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஓராண்டில் கர்நாடகாவில் 1,300 கோடி ரூபாய் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை போலீசார் வந்து, மைசூரில் செயல்படும் போதைப் பொருள் தயாரிப்பு மையத்தை கண்டுபிடிக்கும் நிலை இருந்தால், இங்குள்ள போலீசார் என்ன செய்கின்றனர்? போதைப் பொருள் இல்லாத கர்நாடகாவை உருவாக்குவதாகக் கூறி, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். இப்போது அந்த செயலியின் நிலை என்ன? முதல்வரின் மாவட்டத்திலேயே நிலைமை இப்படி இருந்தால், மற்ற மாவட்டங்களில் என்ன நிலை? இவ்வாறு அவர் கூறினார்.