| ADDED : நவ 15, 2025 08:01 AM
பெங்களூரு: நெலமங்களா மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனம் பஞ்சர் ஆகிவிடுமோ என்ற பீதியுடன் சென்று வருகின்றனர். பெங்களூரு நெலமங்களா மேம்பாலத்தில் பஸ், கார், பைக் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சில பஞ்சர் கடை உரிமையாளர்கள், இந்த மேம்பாலத்தில் வேண்டுமென்றே ஆணிகளை வீசி, அவ்வழியாக வரும் வாகனங்கள் பஞ்சர் ஆகும்படி செய்கின்றனர். பஞ்சர் ஆன வாகன ஓட்டிகளும் வேறுவழியின்றி, மேம்பாலத்திற்கு அருகிலேயே இருக்கும் கடைகளில் பஞ்சர் ஒட்டும்போது கூடுதலாக வசூலித்து அடாவடி செய்கின்றனர். மேம்பாலத்தில் கொத்து கொத்தாக ஆணிகள் கிடக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. புதிய வீடியோ ஒன்று, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில், மூன்று பைக்குகளின் டயர்கள் பஞ்சர் ஆகி மேம்பாலத்தின் ஓரங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. சாலையில் கிடந்த ஆணியை எடுத்து கொத்தாக பைக்கின் சீட் மீது வைத்துள்ளனர். ஆணியை சாலையில் போட்டு வாகனங்களை வேண்டுமென்றே பஞ்சர் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் வாகனம் பஞ்சர் ஆகிவிடுமோ என்ற அச்சத்திலேயே பயணம் செய்கின்றனர்.