நந்தினி இட்லி மாவு சந்தையில் தட்டுப்பாடு
பெங்களூரு: புரதச்சத்து கொண்ட தரமான நந்தினி பிராண்ட் இட்லி, தோசை மாவுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது.கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நந்தினி பிராண்ட் பெயரில், பால், தயிர், லஸ்சி, நெய், வெண்ணெய், சாக்லேட், மைசூர் பாக், பால்கோவா, துாத்பேடா உட்பட, பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது.கடந்த டிசம்பர் 25ம் தேதி, முதல்வர் சித்தராமையா நந்தினி இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தார். 450 கிராம் மாவு 40 ரூபாய்க்கும், 900 கிராம் மாவு 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.புரதச்சத்து நிறைந்த தரமான மாவு என்பதால், பொது மக்களின் முதல் தேர்வாக நந்தினி பிராண்ட் மாவு இருக்கிறது. நந்தினி பார்களில் இட்லி, தோசை மாவு அமோகமாக விற்பனை ஆகிறது. தேவை அதிகரித்துள்ளது.ஆனால் அதற்கு ஏற்றபடி, கே.எம்.எப்., மாவு சப்ளை செய்யவில்லை. மாவு பாக்கெட்டுகளை சப்ளை செய்யும்படி, கே.எம்.எப்.,பிடம் நந்தினி பார்லர்கள் பல முறை வேண்டுகோள் விடுத்தும் பலன் இல்லை.நந்தினி பார்லர்களில் ஸ்டாக் இல்லை என, பதில் வருகிறது. வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள், கேழ்வரகு உட்பட, மற்ற சிறு தானியங்கள் அடங்கிய ரெடிமேட் மாவு பாக்கெட்டுகளை, மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்கின்றன.மக்களிடம் அமோக வரவேற்பு இருந்தும், மாவு சப்ளை செய்யாத கே.எம்.எப்., மீது பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.