உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்கும் தன்மை பாக்கெட்டில் நந்தினி பால் பி.ஏ.எம்.யு.எல்., இயக்குநர் சுரேஷ் தகவல்

மக்கும் தன்மை பாக்கெட்டில் நந்தினி பால் பி.ஏ.எம்.யு.எல்., இயக்குநர் சுரேஷ் தகவல்

பெங்களூரு: பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், ராம்நகரில், தினமும் 25 லட்சம் நந்தினி பால், பிளாஸ்டிக் கவர்களில் விற்பனையாகின்றன. இதை தவிர்க்க மக்கும் தன்மை கொண்ட பாக்கெட்டில் பால் வினியோகிக்க 'பி.ஏ.எம்.யு.எல்., எனும் பெங்களூரு பால் கூட்டுறவு சங்கம் முடிவு செய்துள்ளது.பி.ஏ.எம்.யு.எல்., இயக்குநர் சுரேஷ் கூறியதாவது:பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், ராம்நகர் மாவட்ட கூட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று அழைக்கப்படும் பெங்களூரு பால் கூட்டுறவு சங்கம் மூலம், தினமும் 25 லட்சம் பால் பாக்கெட்கள் விற்பனையாகின்றன. பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, மக்கும் தன்மை கொண்ட பாக்கெட்களில் பால் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.சோதனை ஓட்டமாக, பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா அருகில் உள்ள ஹூனசேனஹள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி முதல் மக்கும் தன்மை கொண்ட பாக்கெட்டில், 120 பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதை ஆய்வு செய்த அதிகாரிகள், பாக்கெட்டில் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும்; தரமும் நன்றாக இருக்கிறது என்றும் கூறி உள்ளனர்.வழக்கமான பிளாஸ்டிக் கவர்கள் மக்க, 500 ஆண்டுகளாகும். அதுவே, மக்கும் தன்மை கொண்ட பாக்கெட்டுகள், ஆறு மாதங்களில் மக்கி, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருக்கும்.புதிய பாக்கெட்டுகள் சோளத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டு, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அவை தற்போதுள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் போல் இருக்கும்; விலையும் அதிகம். ஆனாலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இம்முயற்சியை பி.ஏ.எம்.யு.எல்., எடுத்துள்ளது.நாட்டிலேயே பாலுக்கு மக்கும் பாக்கெட்டை அறிமுகம் செய்த முதல் பால் கூட்டமைப்பு 'பி.ஏ.எம்.யு.எல்.,' ஆகும். பெங்களூரில் 50 சதவீதம் இங்கிருந்து தான் பால், தயிர் செல்கின்றன. தினமும் 20 முதல் 25 லட்சம் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது நகரில் உருவாகும் கழிவுகளின் அளவை பெரிதும் அதிகரிக்கிறது. மக்கும் பால் பாக்கெட்கள் அறிமுகம் செய்ததன் மூலம், நகரில் குப்பை பிரச்னை ஓரளவு குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.மக்கும் தன்மை கொண்ட பால் பாக்கெட்டுடன் சுரேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி