பெங்., ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பேச்சு ஆந்திராவுக்கு மாற்ற நர லோகேஷ் அழைப்பு
''ஆந்திராவில் முதலீடு செய்வது குறித்து பெங்களூரில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது,'' என, ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நர லோகேஷ் தெரிவித்தார். கர்நாடக முதலீட்டாளர்களை ஈர்ப்பதில், ஆந்திர தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நர லோகேஷ் மும்முரமாக உள்ளார். இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும், அவருக்கும் இடையே, 'எக்ஸ்' தளத்தில் வார்த்தை மோதல் நேர்ந்தது. இந்நிலையில், ஆந்திராவில் 1.33 லட்சம் கோடி ரூபாய்க்கு கூகுள் நிறுவனம் முதலீடு செய்தது தொடர்பாக, நர லோகேஷ் கூறியதாவது: எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய ஒவ்வொரு ரூபாய்க்கும் போட்டியிடுவோம். வேலை வாய்ப்பு, சிறந்த வணிக சூழல் உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அனந்தபூரில் உள்ள கியா மையம் போன்று வலுவான உள்கட்டமைப்பு, கிளஸ்டர்களை உருவாக்கி, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். பெங்களூரை தளமாக கொண்ட 'ஸ்டார்ட் அப்'களுடன் அவர்களின் நிறுவனங்கள் விரிவாக்கம் அல்லது ஆந்திராவுக்கு இடம் பெயர்வது குறித்து, பேச்சு நடந்து வருகிறது. அவர்கள் (கர்நாடக அரசு) திறமையற்றவர்களாக இருந்தால், நான் என்ன செய்ய முடியும்? உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதாக அவர்களின் சொந்த மாநில தொழிலதிபர்களே கூறுகின்றனர். மின்வெட்டு, உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்பட வேண்டும். எங்கள் மாநிலம் ஏறகனவே 120 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது. மேலும், கர்நாடகாவுடன் போட்டியிடும் வகையில், ஆந்திராவில் சீர்திருத்தங்கள் வேகம் எடுத்துள்ளன. இதன் வேகத்தில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதிலளிக்க வேண்டி உள்ளது. இது தான் அவர்களின் சவால். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -: