உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புதிய போலீஸ் கமிஷனர் நியமனம்

புதிய போலீஸ் கமிஷனர் நியமனம்

பெங்களூரு: கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி பெங்களூரு போலீஸ் கமிஷனர் உட்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. இந்த கூட்டம் முடிந்ததும் சித்தராமையா அளித்த பேட்டி:கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்ததால், நாங்கள் துக்கத்தில் உள்ளோம். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அமைச்சரவை கூட்டத்தில், மற்ற எதையும் பற்றி விவாதிக்காமல், முழுக்க முழுக்க 11 பேர் இறந்த சம்பவம் குறித்து மட்டும் விவாதித்தோம். இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்துள்ளோம்.மேலோட்டமாக பார்க்கும் போது பொறுப்பற்ற முறையிலும், பணியில் அலட்சியமாக இருந்ததாலும், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மத்திய மண்டல டி.சி.பி., சேகர் தெக்கண்ணவர், மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் விகாஸ் குமார், மத்திய மண்டல ஏ.சி.பி., பாலகிருஷ்ணா, கப்பன் பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரிஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.ஆர்.சி.பி., நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், மைதானத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தினர், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க முக்கியஸ்தர்களை கைது செய்யவும் உத்தரவிட்டு உள்ளேன்.நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து இதுபோன்ற சம்பவம் மாநிலத்தில் நடந்தது இல்லை. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளோம். இப்போது நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம். இருவரும் விசாரணை நடத்தலாம். கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், பெங்க ளூரின் புதிய போலீஸ் கமிஷனராக சீமந்த் குமார் சிங் நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !