உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிலத்தடி நீரை பாதுகாக்கும் புதிய திட்டம் இன்று துவக்கம்

நிலத்தடி நீரை பாதுகாக்கும் புதிய திட்டம் இன்று துவக்கம்

பெங்களூரு : நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், 'தண்ணீர் இருந்தால் நாளை' என்ற புதிய திட்டம் இன்று துவங்கப்படுகிறது. பெங்களூரில் நேற்று மாநில சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் போசராஜு அளித்த பேட்டி: இந்த உலகின் உயிர்நாடியாக இருப்பது தண்ணீர். நவீனத்துவம், வளர்ச்சியின் அவசரத்தில் தண்ணீரை பாதுகாப்பதில் மனிதர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர். நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் தாக்கத்தால் நிலத்தடி நீர் சுரண்டப்படுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல தாலுகாக்கள், நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் பகுதிகளாக மாறிவிட்டன. ஒரு சொட்டு தண்ணீருக்காக ஆயிரக்கணக்கான அடி பள்ளம் தோண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால், விவசாயம், குடிநீர், பிற தேவைகளுக்கு நிலத்தடி நீரை சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தண்ணீர் இருந்தால் நாளை என்ற புதிய திட்டம், இன்று விதான் சவுதாவில் துவங்கப்படுகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைப்பர். கிராமப்புறங்களில் மக்களின் ஒத்துழைப்புடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். தண்ணீர் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவது; நீர்வளங்களை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இந்த திட்டம் முதல்கட்டமாக 16 மாவட்டங்களின் 27 தாலுகாக்களில் செயல்படுத்தப்படும். நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும், கல்யாண கர்நாடகா பகுதியில் உள்ள 525 கிராம பஞ்சாயத்துகளில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக 200 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தயாரித்துள்ளோம். புதிய திட்டத்திற்கான துாதராக, நடிகர் வசிஷ்டா சிம்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார். வரும் நாட்களில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து, மாநிலம் முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி