பெங்களூரில் 50 இடங்களில் புதிய டிராபிக் சிக்னல்கள்
பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், போக்குவரத்து போலீஸ் துறை புதிதாக 50 டிராபிக் சிக்னல்கள் பொருத்தி உள்ளது. இதுகுறித்து, பெங்களூரு நகர் போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறியதாவது: பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் விளைவாக போக்குவரத்து நெருக்கடியும் அதிகரிக்கிறது. குறிப்பாக நகரின் பிரதான சாலைகளில், போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு காலத்தில் வாகன நெருக்கடி இல்லாத சாலைகளில் கூட, தற்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோரும் அதிகரிக்கின்றனர். போக்குவரத்து நிர்வகிப்புக்காகவும், சாலை விதிகளை மீறுவோரை கட்டுப்படுத்தும் வகையிலும் டிராபிக் சிக்னல்கள் பொருத்தப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களில், புதிதாக 50 டிராபிக் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் பெங்களூரில் டிராபிக் சிக்னல்கள் எண்ணிக்கை, 500ஐ தாண்டியுள்ளது. அந்தந்த பகுதி போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, டிராபிக் சிக்னல்கள் பொருத்தப்படுகின்றன. போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள ஜங்ஷன்களில், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.