தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர் வேண்டாம்
பெங்களூரு : 'தேர்தல் பணிகளுக்கு, வெவ்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அரசு தலைமைச் செயலர் ஷாலினி ரஜ்னீஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் நேரங்களில், வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்வது, ஓட்டுச்சாவடி பணிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களை, மாவட்ட நிர்வாகங்கள் நியமிக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு அன்றாட பாடங்கள் நடத்துவதில், சிக்கல் ஏற்படுகிறது. அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, கல்வித்துறை முதன்மை செயலர், கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே வரும் நாட்களில், தேர்தல் பணிகளுக்கு, வெவ்வேறு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர் அல்லாதவர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டாம். உச்ச நீதிமன்றமும் இதுகுறித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.