பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அரசில் முதல்வர் பதவியை விட்டுத்தருவதில்லை என்பதில், சித்தராமையா உறுதியாக நிற்கிறார். இது ஒரு புறமிருக்க, முதல்வர் பதவியில் அமர சிவகுமார் தீவிர முயற்சியில் இருக்கிறார் . இதற்கிடையே ஒக்கலிக சமுதாய எம்.எல்.ஏ.,க்கள் சிலர், நேற்று திடீரென டில்லிக்கு சென்றுள்ளனர். காங்., தேசிய பொதுச்செயலர் வேணுகோபாலை சந்திக்க, நேரம் கேட்டிருந்தனர். அவரும் இன்று நேரம் கொடுத்துள்ளார். அவரை சந்தித்து, ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே சிவகுமார் நேரடியாக செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இப்போது அவருக்கு ஆதரவாக ஒக்கலிக எம்.எல்.ஏ.,க்கள் களத்தில் இறங்கி உள்ளனர். இதன் பின்னணியில், ம.ஜ.த., இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் உள்ளதால், பல நேரங்களில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. அடுத்த சட்டசபை தேர்தலில் பழைய மைசூரு பகுதியில், பா.ஜ.,வின் ஒத்துழைப்புடன், தங்கள் கட்சியை பலப்படுத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் திட்டம் வகுத்துள்ளனர். இதை காங்கிரசின் ஒக்கலிக தலைவர்கள் கவனிக்கின்றனர். பழைய மைசூரு பகுதியில் ம.ஜ.த.,வை பின்னுக்கு தள்ளி, காங்கிரஸ் முன்னிலைக்கு வந்துள்ளது. இச்சூழ்நிலையில் ம.ஜ.த.,வின் திட்டத்துக்கு, பதில் திட்டம் வகுக்க வேண்டியுள்ளது. ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த சிவகுமாரை முதல்வராக்கினால், அந்த சமுதாயத்தினரை, காங்கிரசுக்கு ஈர்க்க வசதியாக இருக்கும் என்பதை, மேலிடத்துக்கு புரிய வைக்க, ஒக்கலிக எம்.எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர். எனவே வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணா, பசவராஜ் சிவகங்கா, குப்பி சீனிவாஸ், ஆனேக்கல் சிவண்ணா, ரவி கானிகா, குனிகல் ரங்கநாத், நெலமங்களா சீனிவாஸ் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் நேற்று டில்லிக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் இக்பால் ஹுசேனும் சென்று உள்ளார். நானே முதல்வராக நீடிப்பேன் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, நேற்றுடன் இரண்டரை ஆண்டு நிறைவடைந்த நிலையில், சாம்ராஜ்நகரில் முதல்வர் சித்த ராமையா அளித்த பேட்டி: சாம்ராஜ் நகருக்கு சென்றாலே பதவி பறிபோகும் என்ற மூடநம்பிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்கு வந்தவுடன் தான் அதிகாரம் பெற்றதாக உணர்கிறேன். என் முடிவில் தெளிவாகவே இருக்கிறேன். மக்களின் ஆசி இருக்கும் வரை, நானே முதல்வராக இருப்பேன். 17வது முறையாக அடுத்த ஆண்டும், நானே பட்ஜெட்டை தாக்கல் செய்வேன். அமைச்சரவை மாற்றம் குறித்து கூறியிருந்தேன். எல்லோரும் இதை புரட்சி என கூறுகின்றனர். இதில், புரட்சியோ, மாயையோ எதுவும் கிடையாது. 2028 தேர்தலில் யாருடைய தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி வரும் நாட்களில் முடிவு செய்யப்படும். மத்திய அரசுக்கு கர்நாடகா, ஜி.எஸ்.டி.,யை வாரி வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு, சரியாக மானியம் வழங்குவதில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தால், சில அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். நானும் அந்த அவமானங்களை சந்தித்தேன். முதன் முதலாக நான் நிதி அமைச்சரானபோது, நுாறு ஆடுகளை கூட எண்ணத் தெரியாது என, பலரும் கேலி செய்தனர். பல நாளிதழ்கள் என்னை இழிவுபடுத்தின. ஆனாலும், நான் 16 பட்ஜெட்டுகளை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.