உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதியவரின் பெண்ணாசை ரூ.32 லட்சம் பறிகொடுப்பு

முதியவரின் பெண்ணாசை ரூ.32 லட்சம் பறிகொடுப்பு

பெங்களூரு: பெண் மீதான சபலத்தால், 32 லட்சம் ரூபாயை முதியவர் பறிகொடுத்தார். பெங்களூரின், ஹொரமாவில் 63 வயது முதியவர் வசிக்கிறார். நடப்பாண்டு செப்டம்பர் 5ம் தேதி, 'சேட்டிங்' பெயரில் அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அழகான பெண்களை சந்திக்க வேண்டும் என்றால், 1,950 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்' என்றார். முதியவரும் பணம் செலுத்தினார். சில நாட்களுக்கு பின், 'வாட்ஸாப்'பில் மூன்று இளம் பெண்களின் போட்டோக்களை அனுப்பினர். அவற்றில் ஒரு பெண்ணை தேர்வு செய்யும்படி கூறினர். முதியவரும் 'ரித்திகா' என்ற பெண்ணை தேர்வு செய்து கொண்டார். ரித்திகாவின் மொபைல் எண்ணை அனுப்பினர். முதியவரும், அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அவ்வப்போது பேசிக்கொண்டனர். விரைவில் சந்திப்பதாக அவர் கூறினார். இதற்கிடையில் ரித்திகா, 'நான் தசராவுக்காக என் பெற்றோரை பார்க்க, ஊருக்கு செல்கிறேன். சில நாட்களுக்கு எனக்கு போன் செய்ய வேண்டாம். மெசேஜ் அனுப்ப வேண்டாம்' என கூறினார். சில நாட்களுக்கு பின், ப்ரீத்தி என்ற இளம்பெண், முதியவரை தொடர்பு கொண்டு பேசினார். 'நீங்களும், ரித்திகாவும் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். இதற்காக பணம் தேவைப்படுகிறது' என்றார். இதை நம்பிய முதியவர், ப்ரீத்தி கூறிய மூன்று வங்கி கணக்குகளுக்கு, அக்டோபர் 18ம் தேதி வரை, கொஞ்சம் கொஞ்சமாக 32.2 லட்சம் ரூபாய் அனுப்பினார். இவ்வளவு பணம் அனுப்பியும், முதியவரை ரித்திகா சந்திக்க வரவில்லை. அவருக்கு மீண்டும் போன் செய்த ப்ரீத்தி, மேலும் பணம் கேட்டுள்ளார். மோசடி என்பதை உணர்ந்த முதியவர், பணம் கொடுக்க மறுத்ததால், ப்ரீத்தி மிரட்ட துவங்கினார். கலக்கம் அடைந்த முதியவர், வேறு வழியின்றி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !