கல்லுாரி மாணவர்களிடம் பணம் பறிப்பு ஒருவர் கைது; மற்றவர்கள் தலைமறைவு
ஹொஸ்கோட்: கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை வழிமறித்து பணம் பறித்த கும்பலில், ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு பாகலுார் பகுதியில் உள்ள கல்லுாரியில், நான்கு மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் கடந்த, 21ம் தேதி காலை, பிரியாணி சாப்பிட, இரண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். சாப்பிட்ட பின், 6:00 மணிக்கு தாங்கள் தங்கியுள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மேடஹள்ளி அருகே ஆறு பேர் கும்பல் அவர்களை வழி மறித்தது. கத்தியை காட்டி மிரட்டி, அவர்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மொபைல் போன்களை பறித்துக் கொண்டது. பின், அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து 1,800 ரூபாயை தங்களின் வங்கி கணக்கிற்கும் மாற்றியது. அதுமட்டுமின்றி, நான்கு மாணவர்களையும் ஒரு மணி நேரமாக தாக்கி டார்ச்சர் செய்துள்ளனர். பின், அவர்களின் நண்பர்களுக்கு போன் செய்து, கூடுதலாக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். நண்பர்களோ, பாகலுார் போலீசில் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை முன்கூட்டியே யூகித்தவர்கள், மாணவர்களை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர். மீட்கப்பட்ட மாணவர்கள், ஆவலஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த அர்பத் அகமது, 24, என்ற நபரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். உணவு சாப்பிட்டு வந்தவர்களை வழிமறித்து பணம் பறித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.