| ADDED : நவ 13, 2025 04:12 AM
பெங்களூரு: ஒரு நாள் போக்குவரத்து போலீசாராக பணிபுரியும் திட்டத்தை பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து போலீசாரின் பங்கு என்பது இன்றியமையாதது. போலீசார் மழை, வெயில் என, அனைத்து நாட்களிலும் பணி செய்கின்றனர். அப்படி இருக்கையில் பலரும் அலட்சியமாக போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். இவர்களுக்காகவே போக்குவரத்து போலீசார் படும் கஷ்டத்தை ஒரு நாளாவது உணரும் வகையில், புதிய திட்டத்தை பெங்களூரு போக்குவரத்து போலீசார் துவங்கி உள்ளனர். அதாவது, 'முதல்வன்' திரைப்படத்தில் வரும் ஒரு நாள் முதல்வர் பாணியில், 'ஒரு நாள் போக்குவரத்து போலீஸ்' எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க பி.டி.பி., அஸ்ட்ரம் செயலியில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த செயலி மூலம் ஒரு நாள் போக்குவரத்து போலீசாக விண்ணப்பிக்கலாம். இதற்கு மொபைல் எண், பெயர், முகவரி, ஆதார் அட்டை போன்ற அடிப்பை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போதே எந்த இடத்தில் போக்குவரத்து போலீசாராக வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்யலாம். அதை போலீசார் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு விசாரிப்பர். பின்னர், போக்குவரத்து போலீசாராக ஒரு நாள் வேலை செய்யலாம். அவர்களுக்கு உடன் இருந்து போலீசார் வழிகாட்டுதல்களை வழங்குவர். வெற்றிகரமாக பணியை நிறைவு செய்வதவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.