விதிமீறல் கட்டடங்கள் முறைப்படுத்த வாய்ப்பு
பெங்களூரு: ‘‘பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு வாரியத்தின், 50வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது, சொத்து ஆவணங்கள் இல்லாத நில உரிமையாளர்களுக்கு, நில உரிமை பட்டா வழங்குவது உட்பட பல திட்டங்கள் அறிவிக்கப்படும்,’’ என முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பி.டி.ஏ., அலுவலகத்தில் அதிகாரிகளுடன், முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் முதல்வர் அளித்த பேட்டி: பி.டி.ஏ., கையகப்படுத்திய நிலத்தில், கடந்த 2008 ஜூலை 7க்கு பின், கட்டப்பட்ட விதிமீறலான கட்டடங்களை முறைப்படுத்த, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, முந்தைய கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 15க்குள் மனு அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த சலுகையை பயன்படுத்தாவிட்டால், பி.டி.ஏ., இடத்தில் உள்ள கட்டடம் அகற்றப்படும். கெம்பே கவுடா லே – அவுட் உட்பட மற்ற இடங்களில் தாமாக முன் வந்து, நிலத்தை விட்டு கொடுத்தால், ஒரு ஏக்கருக்கு 30க்கு 40 அடி வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சி வராம் காரந்த் லே – அவுட்டில், நிலம் கொடுத்தவருக்கு, ஒரே நாளில் மனை வழங்கியது, பி.டி.ஏ., வரலாற்றில் முதன் முறையாகும். பி.டி.ஏ.,வின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது, சொத்து ஆவணங்கள் இல்லாத நில உரிமையாளர்களுக்கு, நில உரிமை பட்டா வழங்குவது உட்பட பல திட்டங்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.