உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  2 அமைச்சர்கள் ராஜினாமா எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்

 2 அமைச்சர்கள் ராஜினாமா எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்

பெங்களூரு: ''ஹனுாரில் மூவர் சுட்டுக்கொலை விவகாரத்தில் வன அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி ஆவேசமாக கூறினார். ஹனுாரில் தமிழகத்தை சேர்ந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து, மேல்சபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி பேசியதாவது: ஹனுாரில் வனத்துறை தாக்குதலால் மூவர் உயிரிழந்தது, காங்கிரஸ் அரசு நடத்திய படுகொலை. இச்சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று வன அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இவ்விஷயத்தில் மாநில அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து, விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி: 'மாநில அரசு விவாதம் நடத்த தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்,' என்றார். இருப்பினும், பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மேல்சபை தலைவர் சலீம் அகமது கூறினார். இது குறித்து, சலவாதி நாராயணசாமி கூறுகையில், ''ஹனுார் துப்பாக்கிச்சூடு குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கவும். இவ்விவகாரத்தில் நீதிபதி விசாரணை வேண்டும். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் சிக்கி சிறை சென்ற நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவர் குற்றமற்றவர் என நிரூபிக்க முடியுமா,'' என்றார். இதுபோன்று, சட்டசபையிலும், 'நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும்' என எதிர்க்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !