எதிர்க்கட்சி தலைவர் அசோக் மாற்றமா? 3 நாளாக டில்லியில் இருப்பதால் பரபரப்பு!
பெங்களூரு: தொடர்ந்து மூன்று நாட்களாக டில்லியில் முகாமிட்டு இருப்பதால், கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோக் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. “அப்படி எதுவும் இல்லை,” என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறி உள்ளார்.காங்கிரசுடன் உள்ஒப்பந்த அரசியல் செய்வதாக, விஜயேந்திரா மீதும் அரசு செய்யும் தவறுகளை கண்டித்து போராட்டம் நடத்தும் விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக், சோடை போனதாகவும் கடந்த சில வாரங்களாக கட்சிக்குள் சர்ச்சை எழுந்து வருகிறது.இந்நிலையில் கடந்த 24ம் தேதி அசோக், திடீரென டில்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று முன்தினம் காலை விஜயேந்திராவும் டில்லி சென்றது, கர்நாடக பா.ஜ.,வில் பரபரப்பை அதிகரித்தது. இருவரும் மாற்றப்படலாமென ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.டில்லியில் இருந்து திரும்பிய விஜயேந்திரா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சியின் தலைவராக, என் பொறுப்பை சரியாக செய்துள்ளேன் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகா உட்பட ஏழு மாநிலங்களுக்கு விரைவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தல் முடிந்ததும் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்.எங்கள் கட்சியில் சிறிய கருத்து வேறுபாடு உள்ளது. இது இயற்கையானது. தனிப்பட்ட காரணங்களுக்காக நான் டில்லி சென்றேன். மேலிட தலைவர்களை சந்திக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அசோக் ஏன் டில்லி சென்றார் என்று எனக்கு தெரியாது. அவரை பதவியில் இருந்து மாற்றப் போவதாக ஊடகங்கள் கூறுவது உண்மை இல்லை.தன் பணியை திறமையாக செய்கிறார். எம்.எல்.ஏ.,க்களும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், இப்போது கட்சியில் இல்லை.மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியுடன் இணைந்து அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். சில அமைச்சர்கள் ஆணவத்துடன் பேசுகின்றனர். இதை நிறுத்த வேண்டும். உங்கள் தர்பார் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், விஜயேந்திராவுக்கு எதிரான அணியினர், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா அல்லது கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமாரை, அடுத்த பா.ஜ., தலைவராக அறிவிக்க வேண்டும் என்று, மேலிடத்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.ஒருவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து, அசோக் மாற்றப்பட்டால், சுனில்குமார் தான், மேலிடத்தின் சாய்ஸ் ஆக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.