பானு முஷ்டாக்கை அழைக்க எதிர்ப்பு: ஐகோர்ட்டில் பா.ஜ., மாஜி எம்.பி., மனு
மைசூரு: மைசூரு தசராவை, பானு முஷ்டாக் துவக்கி வைப்பதற்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்தாண்டு மைசூரு தசராவை, 'புக்கர்' பரிசு பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைப்பார் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இதற்கு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சம்ஹா உட்பட கட்சி தலைவர்கள், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், மாநில அரசு, தனது முடிவில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், பிரதாப் சிம்ஹா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவத: தசரா விழா துவக்கி வைக்க, பானு முஷ்டாக்கிற்கு அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. இது அரசியலமைப்பு உரிமைகள், மது உணர்வுகளை மீறுவதாகும். தசராவை துவக்கி வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பானு முஷ்டாக், முன்னர் ஹிந்து எதிர்ப்பு, கன்னட எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டு, ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். எனவே, அவரை தலைமை விருந்தினராக அழைத்த மாநில அரசின் நிலைப்பாடு, அரசியலமைப்பின் 25, 26வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.