உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரேவண்ணா மீதான வழக்கில் விசாரணையை தொடர உத்தரவு

 ரேவண்ணா மீதான வழக்கில் விசாரணையை தொடர உத்தரவு

பெங்களூரு: பணிப்பெண் கடத்தப்பட்ட வழக்கில், ரேவண்ணா மீதான விசாரணையை துவக்கும்படி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்துக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்துக்கு உள்ளான வீட்டு பணிப்பெண்ணை கடத்தியதாக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, அவரது மனைவி பவானி உட்பட ஒன்பது பேர் மீது, மைசூரு கே.ஆர்., பேட் போலீஸ் நிலையத்தில், பணிப்பெண்ணின் மகன் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த சி.ஐ.டி., போலீசார், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றமும், 2024 ஆக., 17ல், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடிவு செய்தது. இதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் 2025 ஜன., 17ம் தேதி இடைக்கால தடை விதித்தது. அதன்பின் நடந்த தொடர் விசாரணைக்கு பின், இந்த உத்தரவை, 2026 பிப்., 5ம் தேதி அகற்றியது. இதற்கிடையில், விசாரணை நீதிமன்றத்தில் தன் மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரேவண்ணா மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி சுனில் தத் யாதவ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'இவ்வழக்கு தொடர்பாக, மனுதாரர் மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை, பிப்., 5ல் கர்நாடக உயர் நீதிமன்றம் அகற்றியது. அது தவிர, இவ்வழக்கு தொடர்பான விசாரணை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது' என்றார். இதற்கு நீதிபதி, ''மனுதாரர் மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை, அகற்றப்பட்டு உள்ளது. எனவே, சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் விசாரணையை தொடரலாம்,'' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை