| ADDED : நவ 21, 2025 06:13 AM
பெங்களூரு: அரசு துறைகள் உட்பட யாரேனும் அனுமதியின்றி சாலைகளில் பள்ளம் தோண்டினால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் சாலைகளை சரிசெய்யும் பணிகளில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் ஈடுபட்டுள்ளது. நவீன கருவிகளை கொண்டு இரவு, பகலாக வேலைகள் நடந்தாலும் சாலைகள் சீரமைக்கும் பணிகள் முடிந்தபாடில்லை. இதற்கிடையில், நகரின் சில பகுதிகளில் குடிநீர், கேபிள், மெட்ரோ பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகின்றன. இதனால், சாலை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்ட ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்: சாலைகளில் அனுமதியின்றி பள்ளங்கள் தோண்டக்கூடாது. குடிநீர், மின்சாரம், மெட்ரோ உள்ளிட்ட அரசு துறைகளாக இருந்தாலும் பள்ளம் தோண்டுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி தோண்டினால், சம்பந்தப்பட்டோர் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். இத்தகையோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதில், எந்த சமரசமும் செய்யக்கூடாது. அதிகாரிகள் சொத்து வரியை சரியான நேரத்தில் வசூலிக்க வேண்டும். வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். நகரில் நடக்கும் 'ஒயிட் டாப்பிங்' பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.