மங்களூரு அரசு பள்ளி வகுப்பறையில் ப வடிவ வரிசையில் இருக்கை முறை
மங்களூரு: மங்களூரில் உள்ள அரசு பள்ளியின் வகுப்பறையில் கடைசி பெஞ்ச் இல்லாத வகையில், 'ப' வடிவில் இருக்கைகள் உருவாக்கப்பட்டன. கேரளாவில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படம், வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துரைத்திருந்தது. இதையடுத்து, அம்மாநிலத்தின் சில அரசு பள்ளியில், 'ப' வடிவில் மாணவர்களின் இருக்கைகள் மாற்றப்பட்டன. அமைச்சருக்கு கடிதம் இதற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், கர்நாடகாவிலும் 'ப' வடிவில் இருக்கை வரிசையை அமல்படுத்த வேண்டும் என, குழந்தைகள் உரிமை ஆர்வலர் நாசிம்ஹா ஜி ராவ், தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மங்களூரு உல்லால் தாலுகாவில் உள்ள ஹூஹாகுவாகல்லு கிராமத்தில் உள்ள டி.கே.இசட்.பி.ஹெச்.பி., அரசுப் பள்ளியில் சோதனை முறையில் 'ப' வடிவ இருக்கை முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, கன்னடம், ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. பள்ளியில் மொத்தம் 18 வகுப்பறைகள் உள்ளன. 545 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது 9 வகுப்பறைகளில், கடைசி பெஞ்ச் இல்லாத 'ப' வடிவில் இருக்கை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைசி பெஞ்ச் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி கூறியதாவது: கேரளாவில் கடைசி பெஞ்ச் அகற்றப்பட்டதை பார்த்து, எங்கள் பள்ளியிலும் இதை செய்ய வேண்டும் என நினைத்தேன். கடந்த 12ம் தேதி முதன் முறையாக ஒரு வகுப்பறையில் மட்டும் 'ப' வடிவ இருக்கை முறை அமல்படுத்தப்பட்டது. இதை அறிந்த, மற்ற வகுப்பை சேர்ந்த மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளிலும், இது போல செய்ய வேண்டும் என்றனர். தற்போது 9 வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் இல்லை. கடைசி பெஞ்ச் மாணவர்கள் என அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது. வகுப்பறையில் 35க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், இம்முறையை நடைமுறைப்படுத்துவது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.