ஈட்டி எறிதல் போட்டியில் பாக்., வீரருக்கு அனுமதி மறுப்பு
பெங்களூரு: பெங்களூரில் நடக்கும் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பெங்களூரு கன்டீரவா மைதானத்தில், ஜூலை 5ம் தேதி, 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த மாதம் நடக்க இருந்த போட்டி, பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர், கென்யாவின் ஜூலியஸ் ஏகோ, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன், பிரேசிலின் லுாயிஸ் மவுரிசியோ டா சில்வா மற்றும் பலர் கலந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.இப்போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் கலந்து கொள்வாரா என கேள்வி எழுந்தது. ஆனால், பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. பஹல்காம் தாக்குதல் காரணமாக, அவருக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.