டி - ஷர்ட்டில் பாகிஸ்தான் கொடி: மாணவர் கைது
பெங்களூரு : சர்ச்சைக்குரிய வகையில்பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 'டி - ஷர்ட்' அணிந்து சுற்றித்திரிந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி இருப்பது போன்ற டி - ஷர்ட்டை அணிந்து, பெங்களூரில் சாலைகளில் பைக்கின் பின்புறத்தில் அமர்ந்தவாறு வாலிபர் செல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவியது. டி - ஷர்ட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து, வன்முறையை துாண்டும் வகையிலான வாசகங்களும் இருந்தன. இந்த வீடியோவை பார்த்த பலரும், வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ஞானபாரதி நகர் போலீசார் தாமாக முன்வந்து வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். விசாரணையில், வாலிபர் அம்பேத்கர் தொழில்நுட்ப கல்லுாரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் இனாயத் அமீன், 20, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இனாயத்அமீன், தனக்கு டி - ஷர்ட்டை வேறொரு நண்பர் பரிசாக அளித்ததாகவும், அதில் எழுதப்பட்ட வாசகங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, போலீசிடம் கூறி உள்ளார்.