சட்டத்தை மதிப்பதாக பரமேஸ்வர் விளக்கம்
பெங்களூரு: சூதாட்டத்தை ஊக்குவித்ததாக வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சட்டத்தை நான் மதிப்பதாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கபடி போட்டிகள் நடக்கும் போது எந்த அணி வெற்றி பெறும் என்று பந்தயம் கட்டுவதாக, கிராம மக்கள் பேசுவது வழக்கம். அதே போன்று பேசி விட்டேன். சட்டப்படி அது தவறு தான். ஆனால் எந்த சூழ்நிலையில் அப்படி பேசினேன் என்பது முக்கியம். சூதாட்டத்தை ஊக்குவித்ததாக என் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டத்தை நான் மதிக்கிறேன். நான் சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக சிலர் சொல்கின்றனர். இது பொய்யாக பரப்பப்படும் விஷயம். உள்துறை அமைச்சர் என்ற முறையில், சட்டத்தை மதிப்பது எனது பொறுப்பு. அமைச்சரவையில் மாற்றம் நடப்பது பற்றி எனக்கு தெரியாது. அது முதல்வர், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு. அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது எங்கள் கடமை. முதல்வருக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக ராஜண்ணா கூறி உள்ளார். தகவல் இல்லாமல் அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.