ராய்ச்சூரில் கே.எஸ்.ஆர்.பி., பட்டாலியன் சட்டசபையில் பரமேஸ்வர் தகவல்
பெங்களூரு: ''நிதித்துறை ஒப்புதல் கிடைத்ததும், ராய்ச்சூரில் கே.எஸ்.ஆர்.பி., பட்டாலியன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சட்டசபையில் அமைச்சர் பரமேஸ்வர் கூறினார். சட்டசபையில் ராய்ச்சூரின் மஸ்கி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பசனகவுடா துருவிஹால் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பதில்: ராய்ச்சூரில், கே.எஸ்.ஆர்.பி., என்ற, கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் அமைக்க, ராய்ச்சூர், யாத்கிர், விஜயபுரா மாவட்டங்களை சேர்ந்த, 30 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதம் என்னிடம் தரப்பட்டுள்ளது. நானும், அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளேன். நிதித்துறை ஒப்புதல் கிடைத்ததும், கே.எஸ்.ஆர்.பி., பட்டாலியன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட வடமாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'பட்டாலியன் அமைக்க, 175 ஏக்கர் நிலமும், கல்யாண கர்நாடகா மண்டல வளர்ச்சி ஆணையத்திடம் இருந்து பணமும் வழங்கப்படும். பட்டாலியன் அமைக்க நடவடிக்கை எடுங்கள். ராய்ச்சூரில் நிறைய புனித தலங்கள், அணைகள் உள்ளன. எல்லை பகுதியாக இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கை தேவை' என்று வலியுறுத்தினர்.