உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காது சிகிச்சைக்கு சென்ற குழந்தை ‘கோமா’ டாக்டர்கள் அலட்சியம் என பெற்றோர் புகார்

காது சிகிச்சைக்கு சென்ற குழந்தை ‘கோமா’ டாக்டர்கள் அலட்சியம் என பெற்றோர் புகார்

பெங்களூரு: காதில் ஏற்பட்ட காயத்துக்காக சிகிச்சைக்கு சென்ற ஆண் குழந்தை, ‘கோமா’ எனும் உடல் அசைவற்ற நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இது குறித்து அவர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமும், கர்நாடக மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளனர். பெங்களூரின் நாகரபாவியில் வசிக்கும் தம்பதியின் ஆண் குழந்தை ஷயானுக்கு, ஓராண்டு இரண்டு மாதம் வயதாகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், விளையாடும் போது, அலமாரியின் கூர்மையான முனையில் இடித்து கொண்டதில், குழந்தையின் இடது காதில் சிறிய காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக நாகரபாவியின், ‘கிளவுட் சைன்ஸ்’ மருத்துவமனைக்கு, குழந்தையை துாக்கி சென்றனர். குழந்தையின் காதில் தையல் போட வேண்டும் என, கூறி மயக்கமருந்து கொடுத்தனர். அதன்பின் குழந்தை கோமாவுக்கு சென்று விட்டது. வல்லுநர் இல்லாமலேயே, ஊழியர்கள் அதிக ‘டோஸ்’ மயக்க மருந்து கொடுத்ததால், குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டதாக, பெற்றோர் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்துகின்றனர். மூன்று மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்தும், குணமடையவில்லை. காது சிகிச்சைக்காக வந்த தங்கள் குழந்தையை, கோமா நிலையை அடையும்படி செய்து விட்டனர். டாக்டர்கள் மீது கர்நாடக மருத்துவ கவுன்சிலிலும், மாவட்ட சுகாதார அதிகாரியிடமும், ஷயானின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சி.வி.ராமன் பொது மருத்துவமனையின் டாக்டர் ரகுநாத் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், கிளவுட் சைன்ஸ் மருத்துவமனைக்கு வந்து, ஆய்வு செய்தனர். அங்குள்ள டாக்டர்களின் குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை அளித்துள்ளனர். குழந்தைக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும்படி, மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார். குழந்தைக்கு மயக்கமருந்து கொடுத்த டாக்டர் சரண், மாயமாகி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி