பச்சிளம் பெண் குழந்தைகளை தவிக்க விட்டு பெற்றோர் ஓட்டம்
பெங்களூரு : கர்நாடகாவின் இரண்டு இடங்களில், மருத்துவமனைகளில் பச்சிளம் பெண் குழந்தைகளை விட்டு விட்டு, குடும்பத்தினர் ஓடிவிட்டனர்.பாகல்கோட் நகரின், தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் மதியம், 25 மதிக்கத்தக்க கர்ப்பிணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுகப்பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆரோக்கியமாக இருந்தனர்.வார்டில் தாயும், குழந்தையும் இருந்தனர். சிறிது நேரம் கழித்து நர்ஸ் வந்து பார்த்த போது, குழந்தை மட்டும் இருந்தது. தாயை காணவில்லை. சுற்றுப்புறங்களில் தேடியும் தென்படவில்லை. அவரது குடும்பத்தினரும் அங்கில்லை. இது குறித்து, மருத்துவமனை ஊழியர்கள், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த அதிகாரிகள், குழந்தையை தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைத்தனர். பெண் குழந்தை என்ற காரணத்தால், பெற்றோர் விட்டு விட்டு சென்றிருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகாவின், பி.ஜி.நகரின் ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனை கேட் அருகில், நேற்று முன் தினம் இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டது.ஊழியர்கள் பார்த்தபோது, மருத்துவமனை அருகில் உள்ள மரத்தடியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன, பச்சிளம் பெண் குழந்தை இருப்பது தெரிந்தது.குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார், குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.