உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விமான நிறுவன ஊழியர்களை ஆபாசமாக திட்டிய பயணியர்

விமான நிறுவன ஊழியர்களை ஆபாசமாக திட்டிய பயணியர்

தேவனஹள்ளி: ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், அந்நிறுவன ஊழியர்களை, பயணியர் ஆபாசமாக திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1ல் இருந்து, டில்லிக்கு நேற்று முன்தினம் ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட இருந்தது. கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்படுவதாக, விமான நிறுவன ஊழியர்கள் அறிவித்தனர். இந்நிலையில் விமான நிலையத்தில் உள்ள, விமான நிறுவன ஊழியர்கள் அறை பகுதிக்கு சென்ற 35க்கும் மேற்பட்ட பயணியர், ஏன் கடைசி நேரத்தில் விமானத்தை ரத்து செய்துள்ளீர்கள்? என்று கேட்டனர். இதற்கு ஊழியர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. கோபம் அடைந்த பயணியரில் சிலர், விமான நிறுவன ஊழியர்களை ஆபாசமாக திட்டினர். இதில் ஒரு பெண் பயணி, பெண் ஊழியரை பார்த்து சரமாரியாக ஆபாசமாக திட்டியதுடன் அவரை தாக்கவும் முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பயணியரை சமாதானம் செய்து அனுப்பினர். பயணியர் ஆபாசமாக பேசி திட்டியதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆபாசமாக திட்டிய பயணியர் மீது, விமான நிறுவனம் சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !