மெட்ரோ ரயிலில் பிச்சை பயணியர் அதிர்ச்சி
பெங்களூரு : மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபரால் சக பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூரில், 'மெட்ரோ ரயில்களில் உணவு உண்ணக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, கேமராக்களில் படம் எடுக்கக்கூடாது, அநாகரிக செயல்களில் ஈடுபடக்கூடாது, மொபைலில் சத்தம் அதிகமாக வைத்து உபயோகிக்கக்கூடாது, பிச்சை எடுக்கக்கூடாது' என பல விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை பெரும்பாலான பயணியர் கடைப்பிடித்து வந்தாலும், சில பயணியர் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். இவ்வகையில், மெட்ரோ பச்சை நிற பாதையில் மெஜஸ்டிக்கில் இருந்து யஷ்வந்த்பூர் செல்லும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர், பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில், கருப்பு டி ஷர்ட் அணிந்த நபர், சக பயணியரிடம் 'அம்மா... தாயே... தர்மம் பண்ணுங்க' என பிச்சை எடுக்கிறார். இதை பார்த்த சக பயணியர் அதிர்ச்சி அடைகின்றனர். மெட்ரோ ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய முடியாது. டிக்கெட் விலையும் 10 முதல் 90 ரூபாய் வரை உள்ளது. அப்படி இருக்கையில், இந்நபர் எவ்வாறு காசு கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு ரயிலுக்குள் சென்று பிச்சை எடுத்தார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.