பெங்களூரு - அசோகபுரம் மெமு ரயில் தாமதம் பிடதியில் பயணியர் போராட்டம்
ராம்நகர்: ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதமாக வந்ததால், பிடதி ரயில் நிலையத்தில் பெங்களூரு - மைசூரு அசோகபுரம் ரயில் முன் போராட்டம் நடத்திய பயணியரை, போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். பெங்களூரில் இருந்து மைசூரு அசோகபுரத்துக்கு மெமு ரயில் நேற்று மாலை புறப்பட்டது. பெங்களூரு கெஜ்ஜாலா அருகே சென்றபோது, தொழில்நுட்பம் காரணமாக, ஒன்றரை மணி நேரம் நின்றது. அது சரியான பின், புறப்பட்ட ரயில், பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதி ரயில் நிலையத்துக்கு சென்றது. அங்கும் ஒரு மணி நேரம் ரயில் நின்றது. ஏற்கனவே தாமதமாக வந்ததால், கோபத்தில் இருந்த பயணியர், மேலும் ஒரு மணி நேரம் ரயில் நின்றதால், கடுப்பான அவர்கள், ரயிலுக்கு முன் நின்று போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், பிரச்னைக்கான காரணத்தை கூறியும், அவர்கள் கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பயணியர் மீது லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே ரயில் மீண்டும் புறப்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.