தொழில்நுட்ப கோளாறால் ரயிலில் சிக்கிய பயணியர்
பெங்களூரு: மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், 30 நிமிடங்களுக்கு மேலாக ரயிலுக்குள் பயணியர் சிக்கிக்கொண்டனர். பெங்களூரு கப்பன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6:45 மணிக்கு, பயணியருடன் வந்த மெட்ரோ ரயிலில் மின்சார கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயிலின் கதவுகளை திறக்க முடியாமல் போனது. ரயிலினுள் இருந்த பயணியர் வெளியில் வரமுடியாமல் தவித்தனர். மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் நிலைமையை சரி செய்ய போராடினர். 30 நிமிடங்களுக்கும் மேலாக பயணியர் ரயிலுக்குள் சிக்கிக்கொண்டனர். பின்னர், ரயில்களின் கதவுகள் திறக்கப்பட்டது. ரயிலில் இருந்த பயணியர் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். இச்சம்பவத்தால், ஒயிட்பீல்டு முதல் சல்லகட்டா வரையிலான, ஊதா நிற வழித்தடத்தில் மற்ற ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட பயணியரிடம் மெட்ரோ நிர்வாகம் மன்னிப்பு கேட்டு உள்ளது. ஊதா வழித்தடத்தில் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.