தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு நடப்பு கல்வியாண்டில் அமல்
பெங்களூரு: “பத்தாம் வகுப்பு, பி.யு., 2ம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் 33ஆக குறைக்கப்பட்டது. இது நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்,” என, மாநில தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறினார். கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு, பி.யு., இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் சதவீதம் சரிவை நோக்கிச் சென்றது. இதை சரிசெய்வதற்கு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணை 35லிருந்து 33ஆக குறைத்து, கடந்த ஜூலை மாதம் மாநில அரசு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதுகுறித்து மாநில தொடக்கக் கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பி.யு., இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10ம் வகுப்பில் 625க்கு 206 மதிப்பெண்கள்; பி.யு., 2ம் ஆண்டில் 600க்கு 198 மதிப்பெண்களும் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இதுநடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. மாநிலத்தில் உள்ள தனியார், அரசு என அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்கப்படும். தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுவது குறித்து அனைவரிடமும் ஆலோசனைகள் பெறப்பட்ட பிறகே, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.