| ADDED : டிச 03, 2025 06:36 AM
தங்கவயல்: தங்கவயல் பாஸ்போர்ட் அலுவலகத்தில், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். பெருநகரங்களில் மட்டுமின்றி, பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் சேவை எளிதாக கிடைக்க, மத்திய அரசு, 2012ம் ஆண்டு வகுத்த திட்டத்தின்படி, தங்கவயலில் ராபர்ட்சன்பேட்டை தபால் நிலையத்தில், 2019ல் பாஸ்போர்ட் சேவை மையம் தற்காலிகமாக திறக்கப்பட்டது. ஆனால், அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பெங்களூரில் உள்ள இரண்டு பாஸ்போர்ட் அலுவலகங்களிலும், பணிகள் விரைவாக நடப்பதில்லை காலையில் சென்றால் மாலை வரை அந்த அலுவலகத்தில் நேரத்தை செலவிட வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக தங்கவயலில் எளிதாக பெறலாம் என்று பலரும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு, கோலார், சிகக்பல்லாப்பூர் மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோரும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இங்குள்ள இரண்டு கணினிகளில், 70 முதல் 80 விண்ணப்பங்கள் பதிவு செய்ய வசதி உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வருவோருக்கு டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், விண்ணப்பதாரர்கள் அமர நாற்காலி, கழிவறை, குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் தாய் பால் கொடுக்க பாலுாட்டும் அறை என, எந்த வசதியும் இல்லை. அலுவலகத்திற்கு வெளியே நாள் முழுதும் வெயிலிலோ அல்லது மழையிலோ காத்திருக்க வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள மரத்தின் கீழ் ஓய்வெடுக்க வேண்டும். எந்த நேரத்திலும் டோக்கன் நம்பரை குறிப்பிட்டு அழைக்கப்படலாம் என்ற எண்ணத்தில், அலுவலகத்தின் முன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தோர் கால்கடுக்க காத்திருக்கும் அவலமே தொடர்கிறது.